Published : 07 Mar 2025 11:56 AM
Last Updated : 07 Mar 2025 11:56 AM

அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நீக்கம்: இபிஎஸ் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார். இதை அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தற்போது நீக்கப்பட்டுள்ள விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மற்றும் எல்லாபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நீக்கம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன? முன்னாள் எம்எல்ஏ அதிரடியாக நீக்கப்படுவதற்கு அவர் பாஜக சார்பில் நடைபெற்ற மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் இட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை பாஜக நேற்று முன்னெடுத்தது. இதனையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் நேற்று மும்மொழி கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது அப்போது, அவ்வழியாக காரில் சென்ற முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டார். இந்த சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஊடகப் பேட்டியில் முன்னாள் எம்எல்ஏ, தன்னை வற்புறுத்தி கையெழுத்துப் பெற்றதாகக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x