Last Updated : 07 Mar, 2025 09:27 AM

2  

Published : 07 Mar 2025 09:27 AM
Last Updated : 07 Mar 2025 09:27 AM

மாவட்டங்கள் பிரிப்பு... ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு அழைப்பு! - விஜய்யைக் கண்டு பயப்படுகிறதா திமுக?

மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம், ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு திடீர் பதவி என தேர்தலை நோக்கி திமுக விறுவிறுப்பாக பயணப்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. ஆனால், உண்மையில் இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருப்பது தவெக மீதான அச்சமே என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தவெக-வுக்கு 20 சதவீத வாக்கு வங்கி இருக்​கிறது என பிரசாந்த் கிஷோர் சொன்னாலும் சொன்னார்... அனைத்துக் கட்சிகளிலும் இருந்து தவெக-வின் எதிர்​காலம் குறித்தான விசாரணைகள் தொடங்கி​விட்டன. ஆளும் கட்சியான திமுக தரப்பிலிருந்தும் இந்த விசாரணை​களுக்கு குறைவில்லை.

இதையெல்லாம் உள்வாங்​கித்தான் கட்சியின் கட்டு​மானத்தைச் சீரமைக்கும் முயற்​சியில் இறங்கி இருக்​கிறார் ஸ்டாலின். சற்றே கவனித்துப் பார்த்தால் ஒரு காலத்தில் கட்சியில் செல்வாக்காக இருந்து தற்போது ஒதுங்கி இருக்கும் நபர்களை ஸ்டாலின் முன் வரிசைக்கு அழைத்து வருவது தெரியும்.

உதாரணத்​துக்கு, கட்சிக்குள் செல்வாக்கான நபராக இருந்த திருநெல்வேலி அப்துல் வஹாப் மா.செ. பதவி பறிக்​கப்​பட்டு ஓரம் கட்டப்​பட்​டிருந்​தார். தற்போது அவருக்கு மீண்டும் மா.செ. பொறுப்பு வழங்கப்​பட்​டிருக்​கிறது. அதிமுக வரவான ஈரோடு தோப்பு வெங்க​டாசலம் விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரையும் அமைச்சர் மற்றும் மா.செ. பொறுப்பு​களில் இருந்து ஒதுக்​கிவைக்​கப்பட்ட செஞ்சி மஸ்தானையும் மாவட்டப் பொறுப்​பாளர்களாக அறிவித்​திருக்​கிறார் ஸ்டாலின்.

இப்படி, கட்சிக்குள் அதிருப்​தி​யுடன் இருந்த மக்கள் செல்வாக்​குள்ள மனிதர்கள் எல்லாம் விஜய் பக்கம் வண்டியைத் திருப்​பி​வி​டாமல் இருக்கவே மாவட்​டங்​களைப் பிரித்து அவர்களுக்கு பொறுப்புகளை தந்திருக்​கிறது திமுக என்கிறார்கள்.

திமுக-​விலிருந்தும் தவெக-வுக்கு சிலர் போகலாம் என உளவுத் துறை தந்த தகவலின் அடிப்​படையில் இத்தகைய நடவடிக்கைகளை வேகப்​படுத்தி இருக்​கிறது திமுக தலைமை. போதாதுக்கு, தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “1967 மற்றும் 1977-ல் நடந்தது போல பிளவுகள் நடக்கும்” என்று திராவிடக் கட்சிகளுக்கு மேலும் திகிலூட்டி இருக்​கிறார்.

சூர்யா வெற்றி கொண்டான்

தவெக-வுக்குப் பயந்து தான் கட்சியை சீரமைக்கும் முயற்​சியில் இறங்கி இருக்​கிறாரா ஸ்டாலின் என்று திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டானிடம் கேட்டதற்கு, “திமுக-வில் மாவட்டப் பொறுப்​பாளர்கள் நியமனம் என்பது கட்சியை பலப்படுத்தும் மற்றும் தேர்தலுக்கான ஒரு உத்தி. தவெக-வுக்கு அஞ்சித்தான் தலைமை இப்படிச் செய்கிறது என்று சொல்வது பேதமை.

மற்ற கட்சிகளில் இருந்து நீக்கப்​பட்​ட​வர்கள் தான் திமுக-வுக்கு வருகிறார்களே தவிர திமுக-​விலிருந்து யாரும் எந்தக் கட்சிக்கும் செல்ல​வில்லை. அதுமட்டுமில்​லாமல், திமுக-​விலிருந்து நீக்கப்​பட்​ட​வர்கள் கூட தவெக பக்கம் இதுவரை செல்ல​வில்லை. அப்படி இருக்கும் போது தவெக-வின் பலம் என்ன? நிலைப்பாடு என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் ​தி​முக-வுக்கு இல்லை” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x