Published : 06 Mar 2025 12:53 AM
Last Updated : 06 Mar 2025 12:53 AM
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் இதுதொடர்பான அரசு மற்றும் முதல்வரின் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நேற்று முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிந்தபிறகு தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சில கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதில், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஒருமனதாக ஆதரவு அளித்த அனைவருக்கும் முதல்வர் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கலாம் என்பதற்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட நகர்வு குறித்து முதல்வர் முடிவு செய்வார்.
அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார்: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் அறிவிக்காத நிலையில் திமுகவுக்கு ஏன் இந்த அவசரம். இருந்தாலும், 1971-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7.18 விகிதாச்சார அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தொகுதிகள் எண்ணிக்கையை 853 ஆக உயர்ந்தாலும் நமக்கு மொத்தம் 61 இடங்கள் கிடைக்கும். இந்த விகிதாச்சார விவரமும் 30 ஆண்டுகளுக்கு தற்போதைய நிலை தொடர அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற விவரமும் இந்த தீர்மானத்தில் இல்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: தேச நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பங்கேற்ற தமிழக மக்களுக்கு தொகுதி மறுவரையறை வெகுமதியா, தண்டனையா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். கூட்டத்தை புறக்கணித்த பாஜக, நாதக, தமாகா கட்சிகளுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: சமச்சீரான விகிதத்தில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இதுதொடர்பாக விவாதிக்க மத்திய பாஜக அரசு அனைத்திந்திய அளவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய பிரச்சினையாகும். தமிழகத்தின் உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களை அதிகளவு பாதிக்கக்கூடும். வரும் காலத்தில் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: பாதிக்கப்படும் தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து நாம் அனைவரும் ஒன்றாக வேண்டும் என கருத்து தெரிவித்தோம். 142 கோடி மக்கள் தொகை என்ற அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், வடமாநிலங்களுக்கு 195 தொகுதிகளும் தென்மாநிலங்களுக்கு 15-ம் கிடைக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 30 சதவீதம் தொகுதிகளை அதிகப்படுத்த வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒப்புதல் இல்லை.
விசிக தலைவர் திருமாவளவன்: மறுசீரமைப்பு செய்தே தீரவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தால், 20 அல்லது 30 சதவீத அடிப்படையில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சமச்சீராக எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்காத வகையில் எல்லை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்.
தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன்: மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தொகுதியை குறைத்து தண்டனை வழங்கினால், அடுத்தடுத்த திட்டங்களை எப்படி தமிழகத்தில் அமல்படுத்த முடியும்?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழகமே திரண்டிருப்பது முதல்வருக்கு கிடைத்த வெற்றி.
உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்: 853 தொகுதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தடுக்க அனைத்து மாநில முதல்வர்களையும்.ஸ்டாலின் ஒருங்கிணைக்க வேண்டும்.
இவர்கள் தவிர, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோரும் கருத்துதெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT