Published : 05 Mar 2025 04:09 PM
Last Updated : 05 Mar 2025 04:09 PM
ஈரோடு: கோபியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை, அதிமுக நிர்வாகிகள் தாக்கி வெளியில் துரத்தினர். முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன் தூண்டுதால் இந்த தகராறு நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று (மார்ச் 5) ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செங்கோட்டையன் பேசினார். கூட்டம் முடிவடையும் தருவாயில் கூட்டத்தில் பங்கேற்ற அந்தியூர் பகுதி அதிமுக பிரமுகர் பிரவீன் என்பவர் எழுந்து நின்று ‘எங்களுக்கு இந்தக் கூட்டம் குறித்து எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை’ என்று சத்தம் போட்டு பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. உடனே செங்கோட்டையன் ‘எது பேசுவதாக இருந்தாலும் மேடைக்கு வந்து பேசுங்கள். அங்கிருந்து பேச வேண்டாம்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த பிரவீன் மேடை அருகே வந்து செங்கோட்டையன் மற்றும் செல்வராஜ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் பிரவீனை தடுத்து நிறுத்தி அவரை கீழே தள்ளி நாற்காலியை தூக்கி வீசி அடிக்க பாய்ந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பயந்து போன பிரவீன் மண்டபத்தில் இருந்து தப்பி வெளியே ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் துரத்திச் சென்றனர். இதனால் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற மண்டபம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, “எங்கள் மாவட்டத்தில் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், குழப்பத்தை விளைவித்து விளம்பரத்துக்காக ஒரு சிலர் இதுபோன்று செய்கின்றனர். ரகளையில் ஈடுபட்ட நபர் கட்சி உறுப்பினரே கிடையாது. அந்த நபர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன், வீட்டு அருகே வசித்து வருகிறார். குழப்பத்தை விளைவிக்க அந்த நபரை, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் தான் கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார்.
துரோகிகளுக்கு இறைவன் பெரிய தண்டனை கொடுப்பார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தியூர் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணமே ராஜா கிருஷ்ணன் தான். அவர் தேர்தலில் அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பதற்காக என்னென்ன வேலை செய்தார் என்கிற ஆதாரம் என்னிடம் உள்ளது. இங்கு நடந்தது கட்சி நிர்வாகிகள் கூட்டம் தானே தவிர உறுப்பினர்கள் கூட்டம் இல்லை. இருந்தாலும் இந்த தவறை செய்த நபரை நாங்கள் மன்னிக்கிறோம். லட்சியம் உயர்வாக இருந்தால்தான் பாதை தெரியும். வெற்றி உறுதியளிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT