Published : 05 Mar 2025 10:18 AM
Last Updated : 05 Mar 2025 10:18 AM
ஓட்டுக்கு பணம் கொடுத்த காலம் போய் இப்போது பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்கவே குலுக்கலில் பரிசு திட்டத்தை அறிவித்து புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்கள் அதிமுக-காரர்கள். மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை விழாவாக கொண்டாடி வருகிறார்கள் அதிமுக-காரர்கள். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியிலும் இன்று (மார்ச் 5) ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.சி.கருப்பணன், அதிமுக அமைப்புச் செயலாளர் சி.தாமோதரன், பெருந்துறை எம்எல்ஏ-வான ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்துக்கு ஆள் திரட்டத்தான் ‘பரிசுக் குலுக்கல்’ என்ற வித்தியாசமான ஐடியாவைக் கையாண்டிருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பவர்கள், கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுமழையை விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். குலுக்கலில் 3 நபர்களுக்கு தங்க நாணயம், 300 நபர்களுக்கு வீட்டு உபயோக பொருட்களான மிக்சி, குக்கர், கிரைண்டர், பீரோ, ஃபேன், சில்வர் பாத்திரங்கள் தரப்படும் என பட்டியல் போட்டு பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள். இதில்லாமல், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் சிறப்புப் பரிசும் தரப்படும் என துண்டறிக்கை அடித்து பிரகடனம் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கூட்டத்தை ஏற்பாடு செய்த ஊத்துக்குளி ஒன்றிய அதிமுக செயலாளர் க.சக்திவேலிடம் பேசினோம். “அம்மாவின் பிறந்த நாளை கட்சியினர் சற்று வித்தியாசமாகவும், ஜாலியாகவும் (!) கொண்டாட முடிவு செய்தோம். அதற்காக, அம்மா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கட்சியினருக்கு நல உதவிகள் வழங்கும் வகையில் நானும், பெருந்துறை எம்எல்ஏ-வான ஜெயக்குமாரும் பிளான் போட்டோம். அதற்காக ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பொதுக்கூட்டத்துக்கு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் வழங்கிட திட்டமிட்டிருக்கிறோம் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போகிறது.
அதனால், குலுக்கலில் 3 பேருக்கு மட்டும் தங்க நாணயத்தை வழங்கிட முடிவெடுத்தோம். இதில்லாமல், கூட்டத்துக்கு வரும் கட்சியினர் சுமார் 800 பேருக்கு அம்மாவின் பிறந்த நாள் பரிசாக ஆளுக்கொரு பொருளை வழங்க முடிவெடுத்திருக்கிறோம். அதற்காக, அதிமுக பலவீனமாகி விட்டது. அதனால் கூட்டம் சேர்க்க இப்படியெல்லாம் பிளான் போடுவதாக நினைத்துவிட வேண்டாம். இந்தப் பகுதியில் அதிமுக எப்போதும் போல் வலுவாகவே இருக்கிறது.
2026-ல் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதேசமயம் அம்மா பிறந்த நாளையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்கள் ஜாலியாகவும், சந்தோஷமா
கவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் பரிசு மழையை அறிவித்திருக்கிறோம்” என்று பெருமையுடன் சொன்னார். பொதுக்கூட்டங்கள் போடுவதே அரிதாகி வரும் நிலையில், பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்க இப்படியொரு ஃபார்முலாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இனி ஊருக்கு ஊர் பரிசுக் குலுக்கல் நடக்கும் என எதிர்பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT