Published : 05 Mar 2025 06:24 AM
Last Updated : 05 Mar 2025 06:24 AM

முதல்வர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: பாஜக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக பங்கேற்பு

மக்களவை தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில், பாஜக, தமாகா தவிர்த்து அதிமுக, பாமக, தவெக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்தால் தங்கள் மாநிலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்று தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், கடந்த பிப்.25-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘மக்களவை தொகுதி வரையறையால், தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.க்கள் எண்ணிக்கை 31 ஆக குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும்.

இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை மார்ச் 5-ம் தேதி நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அரசியலை மறந்து அனைவரும் பங்கேற்க வேண்டும்’’ என்றார். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளி்ட்ட 45 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இக்கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் அமைச்சர்கள் அழைப்புகளை வழங்கினர்.

அமித் ஷா மறுப்பு: இதற்கிடையில், கடந்த பிப்.26ம் தேதி தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறையும் என்ற கருத்தை முழுமையாக மறுத்ததுடன், தொகுதிகள் குறையாது என்று தெரிவித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, இந்த அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாத ஒன்று என கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். அவரை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துவிட்டார். ஆனால், அதிமுக சார்பில் இருவர் பங்கேற்க உள்ளதாக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதவிர, பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்கின்றனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிகளின் தலைவர்கள் கவுரவம் பார்க்காமல் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கும்படி மீண்டும் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, விஜயின் தவெக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பார் என்று நேற்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. மநீம சார்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் ஆய்வு: இன்று காலை 10 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டம் நடைபெறும் தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென நேற்று காலை ஆய்வு செய்தார்.

அப்போது, கட்சித் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மட்டுமின்றி, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x