Published : 05 Mar 2025 12:58 AM
Last Updated : 05 Mar 2025 12:58 AM
சேலம்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான், மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது என்று பாஜக உடனான கூட்டணி குறித்து கேள்விக்கு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பதில் அளித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு, இந்தியா-இலங்கை அரசுகள் கலந்துபேசி, நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.
தருமபுரி ஆட்சியர், எஸ்.பி.யை திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டும் ஆடியோ அதிர்ச்சியளிக்கிறது. உயர் அதிகாரிகளுக்கே இந்த நிலை என்றால், சாதாரண அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் நிலை என்ன? 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிதறாமல் பதிவாக வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அப்போதுதான் யார், யாருடன் இருக்கிறார்கள் என்பது தெரியும். கூட்டணி தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் பதில் அளிக்க முடியாது.
திமுகவினர் ஊழல்... நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்று, தனது கருத்துகளைத் தெரிவிக்கும். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. மத்திய அரசை எதிர்ப்பதாக திமுக பாசாங்கு செய்கிறது. உண்மையாக எதிர்த்தால் திமுகவினர் வீட்டில் ‘ரெய்டு’ நடைபெறும். அந்த அளவுக்கு திமுகவினர் ஊழல் செய்துள்ளனர். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
தேமுதிகவுக்கு மாநிலங்களவை ‘சீட்' ஒதுக்குவதாக ஒப்பந்தம் இல்லை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுவது தொடர்பாக பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக நாங்கள் சொன்னோமா? அப்படி ஒரு ஒப்பந்தம் இல்லை. யாரோ கேட்பது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என்றார். இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவிடம் சென்னையில் நிருபர்கள் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பெயரிலான எக்ஸ் தளத்தில், ‘சத்தியம் வெல்லும், நாளை நமதே’ என்ற கருத்து பதிவிடப்பட்டு, உடனடியாக நீக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT