Published : 05 Mar 2025 12:16 AM
Last Updated : 05 Mar 2025 12:16 AM

எங்களுக்கு யாரும் எதிரி அல்ல; திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே நோக்கம்: அண்ணாமலை உறுதி

உடுமலை அருகே நேற்று நடைபெற்ற கள் விடுதலை கருத்தரங்கில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. படம்: எம்.நாகராஜன்

எங்களுக்கு யாரும் எதிரி அல்ல. திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே அனைவரின் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் யாரும் மொழியைத் திணிக்கவில்லை. அரசுப் பள்ளிகளில், அரசின் மொழிக் கொள்கையை திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எதுவுமே தெரிவிக்காத நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையற்றது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக கூட்டம் நடத்தினால் நாங்கள் பங்கேற்போம்.

திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். எல்லோருடைய நோக்கமும் 2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேசத் தேவையில்லை. தேர்தல் நெருங்கும்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும். நாங்கள் அனைவரிடமும் அன்பாகவே பழகுகிறோம். எங்களுக்கு யாரும் எதிரி அல்ல. மீனவர் என்ற போர்வையில் திமுகவினர் போதைப்பொருள் கடத்துவது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா? இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

கள்ளுக்கு தடை நீக்கம்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கொங்கல்நகரம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற கள் விடுதலை கருத்தரங்கில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலாயுதம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், சாராய ஆலை அதிபர்களுக்கு ரூ.1 லட்சம் கோடியும் கிடைக்கிறது. எனவேதான் கள்ளுக்கு தடையை நீக்காமல் உள்ளனர். தமிழகத்தில் 1.10 கோடி பேர் குடிக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால் தமிழக உற்பத்தி திறன் குறைந்து, ரூ.87 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. டாஸ்மாக் மது விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

கள் விற்பனையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். கள்ளுக் கடைகளுக்கான தடையை நீக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 2026-ல் பாஜக ஆட்சி அமைந்த உடன் முதல் கையெழுத்து கள் தடை நீக்குவதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அமித்ஷா கோவைக்கு வந்து சென்றதால் அரசியல் மாற்றம் ஏற்படும் என பலரும் பேசுகின்றனர். அவர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டேன். வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிகலந்து கொள்வார் எனக் கருதுகிறேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x