Published : 04 Mar 2025 05:06 PM
Last Updated : 04 Mar 2025 05:06 PM

“கள் விற்பனையை அனுமதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!” - அண்ணாமலை

திருப்பூர்: கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் முழுவதும் இயற்கையான கள் விற்பனை தொடங்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "இன்றைய தினம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய, கள் விடுதலை கருத்தரங்கத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக, கள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி, கள்ளுக்கான தடையை நீக்கத் தொடர்ந்து முயற்சித்து வரும் நல்லசாமி, இந்த கருத்தரங்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது பெருமைக்குரியது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் மக்கள் தொகை 5.8 கோடி. இன்று தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 10 லட்சம் பேர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் தனியார் மதுக்கடைகள் இருந்தபோது கூட, இத்தனை பேர் மதுவுக்கு அடிமையாக இல்லை. இன்று அரசாங்கமே மது விற்பனை செய்கிறது.

மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு, வேலைவாய்ப்பு இழப்பு என, இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பு, ஆண்டுக்கு ரூ.87,000 கோடியாக இருக்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பே தவிர, சாராய ஆலைகள் நடத்துபவர்களுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் மட்டும்தான் லாபம் கிடைக்கிறது.

கள் விற்பனை இருந்த காலத்தில், பொதுமக்கள் இத்தனை பேர் மதுவால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று கோடிக்கணக்கானவர்கள், மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். செயற்கை வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படும் மது, பொதுமக்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கவும், மீண்டும் இயற்கையான கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

திமுக ஏன் கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள் என்றால், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலைகளை நடத்துபவர்களே திமுகவினர்தான். கள் விற்பனைக்கு அனுமதி கொடுத்தால், அவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதற்காக, கள் தடையை நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில திமுகவினருக்காக, கள் உற்பத்தி, கெட்டுப் போகாமல் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றைக் காரணமாகக் கூறி தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள் பலனடையும் கள் விற்பனைக்குத் தொடர்ந்து தடை விதிக்கிறார்கள். இவற்றிற்கான திட்டங்கள் தீட்ட மூன்று மாதங்கள் போதும். ஆனால் திமுகவுக்கு மனமில்லை.

கடந்த 2023-ஆம் ஆண்டு, தமிழக ஆளுநரைச் சந்தித்து, கள் விற்பனை குறித்த ஆவணம் ஒன்றை தமிழக பாஜக சார்பாக வழங்கினோம். ஒரு பனை மரத்தில் இருந்து, 164 பொருள்களைத் தயாரிக்க முடியும் என்பது குறித்தும், பனைமரங்கள் மூலம், தமிழகத்தின் பொருளாதாரம் எத்தனை பெரிய வளர்ச்சியடையும் என்பது குறித்தும் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, தமிழகம் முழுவதும் இயற்கையான கள் விற்பனை தொடங்கப்படும். டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளைஞர்களை மீட்பதிலும், விவசாயிகள் கள் விற்பனை மூலம் பொருளாதார வளர்ச்சி பெறவும், நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

கள் விடுதலை கருத்தரங்கங்கள், தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும். பனைமரங்கள் குறித்த புரிதல் இல்லாத இளைஞர் சமுதாயம், பனைமரத்தின் பயன்களையும், அது எத்தனை பெரிய பொருளாதார சக்தி என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, இளைஞர்கள் விவசாயத்தின் பக்கம் வருவதற்கும், இந்த கருத்தரங்கங்கள் உதவி செய்யும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x