Published : 04 Mar 2025 12:34 AM
Last Updated : 04 Mar 2025 12:34 AM
தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர்களிடம் பேசி தமிழகத்துக்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங்கித் தாருங்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட் வரும் மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும்போது, தமிழக அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்தக்கடன் ரூ.9.5 லட்சம் கோடியை நெருங்கியிருக்கும். கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேசிய காணொலி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே ரூ.5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக்கடன் ரூ.9.5 லட்சம் கோடி. நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு மு.க.ஸ்டாலின்’’ என முதல்வர் பேசிய வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ம் ஆண்டு ரூ.55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025-ம் ஆண்டு ரூ.181.74 லட்சம் கோடியாக மாறியுள்ளதே. அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?
தமிழகத்தின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள கல்வி, நூறு நாள் வேலை திட்டம் உள்ளிட்டவற்றுக்கான நிதியைப் பெற்றுத்தாருங்கள். கடந்த மூன்றாண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியை மத்திய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்கள் அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையை காட்டுகிறதே தவிர வேறு அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT