Published : 04 Mar 2025 12:11 AM
Last Updated : 04 Mar 2025 12:11 AM
நாகப்பட்டினம்: நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டி, ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, 38,956 பயனாளிகளுக்கு ரூ.200.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில் முதல்வர் பேசியதாவது: நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் 450 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். பழமை வாய்ந்த நாகை நகராட்சி கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
ஹஜ் புனித இல்லம்: நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் வடிகால்கள், வாய்க்காலின் மதகுகள் ரூ.32 கோடியில் சீரமைக்கப்படும். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு சென்னை யில் ரூ.55 கோடியில் ஹஜ் புனித இல்லம் கட்டப்படும். மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறியதால், தமிழக கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறது மத்திய அரசு.
கண்கலங்க வைத்த சிறுமி: இந்தி ஆதிக்கம் எதற்கு என்றால் சிலரின் சமூக ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குதான். கடலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், மத்திய அரசு நிதி தரவில்லை என்றால் என்ன? நான் தருகிறேன் என்று தன்னுடைய சேமிப்பு தொகை ரூ.10 ஆயிரத்தை காசோலையாக அனுப்பியது என்னை கண்கலங்க வைத்தது. இந்த பிஞ்சு குழந்தைகளுக்கு புரிவது கூட மத்திய அரசுக்கு புரியவில்லை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே,பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை எம்.பி செல்வராஜ், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT