Published : 03 Mar 2025 04:26 PM
Last Updated : 03 Mar 2025 04:26 PM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மழையால் நெற்பயிர்கள் சேதம்!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. திருநெல்வேலி அருகே உள்ள பாலாமடையில் கதிர் விட்டு அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் பெய்த மழையால் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள். | படம்: மு.லெட்சுமி அருண் |

தென்காசி/ திருநெல்வேலி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றும் மழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பரவலாக தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 79 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு பகுதியில் 74, காக்காச்சி பகுதியில் 67, மாஞ்சோலையில் 60, சேர்வலாறில் 52, பாபநாசத்தில் 51, ராதாபுரத்தில் 48, களக்காட்டில் 43.60, மூலக்கரைப்பட்டியில் 40, நாங்குநேரியில் 27.60, கன்னடியன் அணைக்கட்டில் 25.20, அம்பாச முத்திரத்தில் 25, மணிமுத்தாறில் 23.60, சேரன்மகாதேவியில் 23.40, பாளையங்கோட்டையில் 9.20, கொடுமுடியாறு அணையில் 7, நம்பியாறு அணையில் 5, திருநெல்வேலியில் 4.60 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,919 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 80.80 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 93.57 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 674 கனஅடி நீர் வந்தது. 430 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 88.03 அடியாக இருந்தது.

வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 8 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 5.75 அடியாகவும் இருந்தது. சேரன்மகாதேவி வட்டம், வடக்கு வீரவநல்லூரில் தொடர் மழையால் நெல் பயிர்கள் சேதமடைந்தன. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அலுவலர்கள் மழையில் சேதமடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டனர்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் மழையால்
நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கும் நிலையில்
அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தென்காசி: இதேபோல் தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் 42.40 மி.மீ., ராமநதி அணையில் 51, குண்டாறு அணையில் 30.60, ஆய்க்குடியில் 26, கடனாநதி அணையில் 17, கருப்பாநதி அணை, சிவகிரியில் 10,தென்காசியில் 12, சங்கரன்கோவிலில், அடவிநயினார் அணையில் தலா 3 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 48.50 அடியாக இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 44 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 38.72 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 29.75 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 48.75 அடியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு சாரல் காலம்தொடங்கியதில் இருந்து குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து உள்ளது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது. இதனால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க நேற்றும் தடை விதிக்கப்பட்டது. கீழப்பாவூர் பெரிய குளம், மேலப்பாவூர் குளத்து பாசன விவசாய நிலங்களில் நெல் அறுவடைப் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில ரக நெல் பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் தொடர் மழையில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. காலம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழை நீடித்தால் பயிர்கள் சேதம் அதிகரிக்கும் என்றும், இன்னும் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகமாக இருந்தால்தான் அறுவடை பணிகளை தீவிரப் படுத்த முடியும் என்றும் விவசாயி கள் கூறுகின்றனர்.

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில்
குளம்போல தேங்கி நின்ற மழைநீர். | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. காலை 9.30 மணி வரை விட்டு, விட்டு கனமழை பெய்தது. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால், கதிர்களுடன் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து கிடந்தன. மழையால் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் குழிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் குழிகளில் விழுந்து கடும் அவதிப்பட்டனர். சில தெருக்களில் வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பிரதான சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர் டேங்கர் லாரிகள் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவானமழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 12, ஸ்ரீவைகுண்டம் 106, திருச்செந்தூர் 9, காயல்பட்டினம் 34, குலசேகரன்பட்டினம் 25, சாத்தான்குளம் 40, கோவில்பட்டி 12, கழுகுமலை 25, கயத்தாறு 1, கடம்பூர் 2, எட்டயபுரம் 13.30, விளாத்திகுளம் 10, வேடநத்தம் பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழையால் 2 குடிசை வீடுகள் சேதம் அடைந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x