Last Updated : 03 Mar, 2025 03:06 PM

 

Published : 03 Mar 2025 03:06 PM
Last Updated : 03 Mar 2025 03:06 PM

2023-24-ம் நிதியாண்டுக்கான மின்வாரிய நிதிநிலை அறிக்கை குறித்த காலத்துக்குள் சமர்ப்பிப்பு

சென்னை: கடந்த 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மின்வாரியம் சமர்ப்பித்துள்ளதால், தமிழக அரசு ரூ.7,050 கோடி கடன் வாங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியம், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நிதியாண்டு முடிவடைந்ததும், வரவு-செலவு உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய மின்சட்டத்தை பின்பற்றி மின்வாரியம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து வந்தது. அதை குறித்தக் காலத்தில் வெளியிடாமல் தாமதம் செய்து வந்தது.

இந்நிலையில், மின்துறையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதல் கடன் பெற அனுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு 2021-22-ல் அறிவித்தது. அதன் மூலமாக, மாநிலத்தின் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.5சதவீதம் மாநில அரசுகள் கடன் பெறலாம்.

இதனால், தமிழகம் ரூ.7,054 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது. சீர்த்திருத்த நடவடிக்கையாக மின்வாரியம், மத்திய மின்சட்டத்துக்குப் பதில் நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றி இந்தியக் கணக்கு தரநிலை விதிப்படி, நிதி நிலை அறிக்கை தயாரிக்க முடிவு செய்தது. இதில், வரவு-செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுவதுமாக இடம் பெற்றன.

மேலும், நிறுவன சட்டத்தின் கீழ் நிறுவனங்கள், ஒரு நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அந்தாண்டு முடிவடைந்த 6 மாதங்களுக்குள் தணிக்கை செய்து மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை தவறினால் கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும்.

அதன்படி, கடந்த டிசம்பருக்குள் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மின்வாரியம் தயாரித்து, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால், தமிழக அரசு கூடுதலாக ரூ.7,054 கோடி கடன் வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x