Published : 03 Mar 2025 12:51 PM
Last Updated : 03 Mar 2025 12:51 PM

மருத்துவர்கள், செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது சமூக அநீதி: அன்புமணி

சென்னை: மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை கொளத்தூரில் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை என்றும், அங்கு மருத்துவம் அளிப்பதற்காக மாதம் ரூ.60,000 ஊதியத்தில் 35 மருத்துவர்கள், ரூ.18,000 ஊதியத்தில் 156 செவிலியர்கள் உள்ளிட்ட 266 மருத்துவப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவமனைகளை உருவாக்கும் அரசு அதற்கு தேவையான மனிதவளங்களை ஏற்படுத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை கொளத்தூரில் ஏற்கனவே இருந்த மருத்துவமனை தான் இப்போது பெரியார் மருத்துவமனை என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு புதிய மருத்துவப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு புதிய சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும்.

ஆனால், அங்கு ஏற்கெனவே பணியில் இருந்த மருத்துவர்கள் தவிர புதிய சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. மாறாக, பிற மருத்துவமனைகளில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 2023-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட போதும் அங்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. சிறப்பு மருத்துவர்கள் அனைவரும் பிற மருத்துவமனைகளில் இருந்து தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இப்போதும் கூட அங்குள்ள தலைமை மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதற்கு காரணம் போதிய மருத்துவர்கள் இல்லாதது தான். ஒரு மருத்துவரால் தொடர்ந்து 24 மணி நேரம் பணி செய்ய முடியாது. அவ்வாறு பணி செய்தால் அவர்களால் முழுமையான திறனை வெளிப்படுத்த முடியாது. அதற்கெல்லாம் மேலாக இது மனித உரிமை மீறல் ஆகும்.

புதிய மருத்துவமனைகளை ஏற்படுத்துவது என்பது கட்டிடங்களைக் கட்டி, எந்திரங்களைப் பொருத்துவது மட்டும் அல்ல. மருத்துவமனைகளுக்கு மனிதவளம் தான் மிகவும் முக்கியமானது ஆகும். சாதனை செய்து விட்டதாக கணக்குக் காட்டிக் கொள்வதற்காக மருத்துவமனைகளை மட்டும் கட்டி விட்டு, அவற்றுக்கு பிற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை இடமாற்றம் செய்தால் எந்த மருத்துவமனையிலும் மக்களுக்கு முறையான சேவை கிடைக்காது என்பதை அரசு உணர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மருத்துவ சேவையில் பொறுப்புடைமை மிகவும் அவசியம் ஆகும். மருத்துவர்களை தற்காலிகமாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ நியமித்தால் பொறுப்புடைமையை ஏற்படுத்த முடியாது. எனவே, மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது இல்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x