Published : 03 Mar 2025 06:36 AM
Last Updated : 03 Mar 2025 06:36 AM
சென்னை: தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் இனி கிளாம்பக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தபோதும், தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது.
இந்நிலையில், பேருந்துகளை கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பேருந்துகள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT