Published : 03 Mar 2025 06:20 AM
Last Updated : 03 Mar 2025 06:20 AM
சென்னை: இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க கோரி விசிகவின் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சிக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும். இதற்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் கட்சிகள் முன்வைக்கும் வாதங்கள் ஏற்புடையதாக இல்லை.
மும்மொழிக் கொள்கையை தமிழக மக்கள் வரவேற்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தியை படிக்க வேண்டுமென பாஜக ஆதரவு கரம் நீட்டுவது அவர்களது அரசியல் ஆதாயம். இது மக்களின் நலன்களுக்கானது அல்ல. இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை.
அவர்கள் தமிழை படிக்க வேண்டும் என்ற கட்டாயமல்ல. இருமொழிக் கொள்கையே நாடு முழுவதற்கும் போதுமானது. இந்தியை கட்டாயமாக்குவது ஒரே நாடு ஒரே மொழி என்னும் நிலையை உருவாக்குவதற்கான சதி. எனவே, இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்டுக் கொடுக்க வேண்டியது மத்திய அரசு தான். ஆனால், அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு என்பதுபோல ஆளுநர் நாடகமாடுகிறார், அரசியல் செய்கிறார். திமுக கூட்டணி உடையும் என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது. தேர்தல் நேரத்தில் தொகுதி குறித்த பேச்சுவார்த்தை இருக்கும். மற்ற நேரத்தில் மக்கள் பிரச்சினையை தான் பேசுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT