Published : 03 Mar 2025 06:15 AM
Last Updated : 03 Mar 2025 06:15 AM

சென்னை​ பெரி​யார் அரசு மருத்​துவ​மனை​யில் ஒப்பந்த அடிப்​படை​யில் மருத்துவர்​கள், செவிலியர்களை நியமிக்க கூடாது: அரசு மருத்​துவர்கள் வலியுறுத்தல்

சென்னை: புதிதாக திறக்கப்பட்ட பெரியார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து, தரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட ரூ.21.80 கோடியில் 6 தளங்களோடு பல்வேறு புதிய உயர் சிறப்பு சிகிச்சை வசதிகளுடன் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. பெரியார் அரசு மருத்துவமனை என பெயர் சூட்டப்பட்ட இந்த மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி திறந்து வைத்தார். பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மொத்தம் 560 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் உள்ளனர். தற்போது, மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், அது போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த சுகாதாரத்துறை பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர்கள் கலந்தாய்வு மூலம், இந்த மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், ஏற்கெனவே, அவர்கள் பணியாற்றி வந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.60 ஆயிரம் மாத சம்பளத்தில் 35 மருத்துவர்கள், ரூ.18 ஆயிரம் சம்பளத்தில் 156 செவிலியர்கள் மற்றும் பிசியோதெரப்பிஸ்ட், டயாலிசிஸ் பணியாளர்கள் உள்ளிட்டோர் என மொத்தம் 266 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 266 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களை உருவாக்காமல் எப்படி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிட முடியும்.

ஏற்கெனவே கிண்டி கலைஞர் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில், மருத்துவர் பாலாஜி கத்தியால் கொடூரமாக குத்தப்பட்டார்.

அதன் பின்னரும், அங்கு கூடுதலாக மருத்துவர் பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை. அதே தவறு தற்போது பெரியார் நகர் அரசு மருத்துவமனையிலும் நடக்கிறது. முதல்வர் தொகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவமனை முன்மாதிரி அரசு மருத்துவமனை என்று சொல்லப்படும் வகையில் போதிய மருத்துவர்கள், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x