Published : 03 Mar 2025 05:55 AM
Last Updated : 03 Mar 2025 05:55 AM
சென்னை: ஓய்வூதியர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்காக மாதந்தோறும் ரூ.15 கோடி கடன் வழங்க வேண்டும் என போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை.
இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியர்கள் முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயர்வு வழங்கப்பட்டது.
இதற்கான நிதியை ஏற்பாடு செய்ய கடன் வழங்குவது தொடர்பான கடிதத்தை போக்குவரத்து செயலர், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி, போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்கும் வகையில் ஓய்வூதிய அறக்கட்டளைக்கு ரூ.15 கோடி தேவைப்படுகிறது.
எனவே, போக்குவரத்துக் கழகங்கள் பெயரில் மாதந்தோறும் ரூ.15 கோடி கடனாக ஓய்வூதிய அறக்கட்டளைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்விவகாரத்தில் அரசு நிதியுதவி வழங்குவது தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம்: இதற்கிடையே, போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெறுவோருக்கு ஓய்வு பெறும் நாளில் சுமார் ரூ.35 லட்சம் அளவிலான பணப்பலன் வழங்கப்படுவதில்லை. இதைக் கண்டித்து, ஓய்வு பெறும் நாளன்று போராட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக கடந்த 28-ம் தேதி சென்னை, வடபழனி பணிமனையில் ஓய்வு பெற்ற ஓட்டுநர் அசோகன் குடும்பத்துடன் பணிமனை வாயிலில் அமர்ந்து தர்ணா நடத்தினார். இதன் தொடர்ச்சியாக பணப்பலன் வழங்கும் வரை மாதந்தோறும் ஓய்வு பெறும் நாளில் போராட்டம் நடைபெறும் என ஓய்வூதியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT