Published : 03 Mar 2025 05:45 AM
Last Updated : 03 Mar 2025 05:45 AM

கண்ணகி நகர், எழில் நகரில் 22,000 குடியிருப்புகள் பயன்பெற தனித்தனி குடிநீர் தொட்டி: அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கண்ணகி நகர், எழில் நகரில் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தனித்தனி குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஜூலை மாதம் நிறைவடையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் போன்ற முக்கிய சேவை துறை அலுவலர்களை கொண்டு, குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி, கண்ணகி நகர், சுனாமி குடியிருப்பில் உள்ள பொதுமக்களிடம் கோரிக்கை கேட்கும் முகாம் நடத்தப்பட்டது. இந்த குடியிருப்புகளோடு சேர்த்து எழில்நகர், கண்ணகிநகர், சுனாமி குடியிருப்பை சுற்றி 24 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலினை தவிர, எந்தவொரு முதல்வரும் இங்கு நேரிடையாக வந்து மக்களை சந்தித்தது இல்லை.

ஒவ்வொரு வீட்டுக்கும் 300 லிட்டர் கொள்ளளவுடன் கூடிய குடிநீர் தொட்டிகளை கண்ணகிநகரிலும், எழில்நகரிலும் அமைப்பதற்கும் ரூ.69.57 கோடியில் பணிகள் நடைபெறுகிறது. அந்த பணிகளை பொறுத்தவரை பிரதான குடிநீர் குழாய்களை அமைப்பது, 38 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் கூடிய ராட்சத குடிநீர் தொட்டிகளை கட்டுவது போன்ற பணிகள் தற்போது நடக்கிறது. தற்போது 23 சதவீத பணிகள் முடிவுற்றிருக்கிறது. சுமார் 22 ஆயிரம் குடியிருப்புகள் பயன்பெறுகின்ற வகையில் தனித்தனி குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஜீலை மாதம் இறுதிக்குள் முடிவுறும்.

சுனாமி நகரில் 2,048 குடியிருப்புகளுக்கான குடிநீர் தேவை 11 லட்சம் லிட்டர் ஆகும். இப்பகுதிக்கு 3-ல் 1 பங்கு குடிநீர் மட்டுமே சென்றடைவதாகவும், பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்லும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குடிநீர் குழாய்கள் உடைந்திருப்பதும், தொட்டிகள் பழுதடைந்திருப்பதுமே குடிநீர் வீணாவதற்கு காரணம்.

குடிநீர் குழாய்கள், குடிநீர் தொட்டிகள் பழுதை சரிசெய்திடும் வரையில், 3 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அலுவலர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. கூடுதல் குடிநீர் தேக்கி வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாமல் போனாலோ, அவர்களுக்கு குடிநீர் சரியாக வழங்கப்படாமல் போனாலோ லாரிகள் மூலம் குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி நகர் குடியிருப்புக்கு தனி குடிநீர் தேக்க தொட்டி நிறுவ வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x