Published : 03 Mar 2025 05:45 AM
Last Updated : 03 Mar 2025 05:45 AM

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம்: இளையராஜாவை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

வரும் 8-ம் தேதி லண்டனில் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்க சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை இளையராஜா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து முதல்வரும் இளையராஜாவிடம் தமிழக அரசு சார்பாகவும், என் சார்பாகவும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சார்பாகவும் வாழ்த்துகள் எனக் கூறி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதையொட்டி, பதிவு செய்யப்பட்ட காணொலியையும் முதல்வர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8-ல் லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதுக்கினிய ராஜா. தமிழகத்தின் பெருமிதமான இசைஞானியின் இந்தசாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக சென்றேன்.

இசைக்குறிப்புகள்: அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்த சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து இளையராஜா பதிவிட்ட சமூக வலைதளபதிவில், "முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்க செய்தன. மிக்க நன்றி" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் இசையமைப்பாளர் இளையராஜாவைசந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x