Published : 03 Mar 2025 05:35 AM
Last Updated : 03 Mar 2025 05:35 AM
சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மே 8-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, அடுத்த கல்வியாண்டில் (2025-26) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு வரும் மே 8 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://cuet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக மார்ச் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 23-ம் தேதி கடைசி நாளாகும். தொடர்ந்து விண்ணப்பங்களில் மார்ச் 24, 25, 26-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம். க்யூட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
நடப்பாண்டு க்யூட் நுழைவுத் தேர்வு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாணவர்கள் 12-ம் வகுப்பில் எந்த பாடம் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்தில் தேர்வு எழுதலாம். அதேபோல், ஒருவர் அதிகபட்சம் 5 பாடங்கள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற தளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT