Published : 03 Mar 2025 01:50 AM
Last Updated : 03 Mar 2025 01:50 AM
சென்னை: வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் தெரிவித்த கருத்துகளை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழி “பெண்களை இதைவிட கேவலமாக பேச முடியாது. இதைக்கேட்டுக் கொண்டு அவரது வீட்டிலும், அக்கட்சியிலும் பெண்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பொறுப்புள்ள பதவிகளில் இருக்கும் அவர்களிடம் திருப்பி நான் கேள்வி எழுப்பினால் பதில் இருக்குமா, என்னைப்பற்றி என் கட்சியில் இருக்கும் பெண்கள்தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லக்கூடாது. குறிப்பாக திமுக சொல்லக் கூடாது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என்ற குற்றச்சாட்டை எப்படி சுமத்தலாம். அவர் ஒன்றும் நீதிபதி கிடையாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி, பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள், மாணவி மதி விவகாரம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை, பள்ளிச் சிறுமிகளை ஆசிரியர்கள், தாளாளர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கனிமொழி ஏன் வாய் திறக்கவில்லை. நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.
இவ்விவகாரத்தில் நான் 15 ஆண்டுகள் கண்ணியமாக இருந்தபோது இவர்கள் ஏன் எதுவும் பேசவில்லை. ஏனென்றால், அந்நடிகை மட்டுமே பெண். எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள் இல்லை. அப்படித்தானே. என்னப்பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை. முதலில் அவர்கள் தலைமை பண்புடன் பேசட்டும். பின் நான் கண்ணியத்துடன் பேசுகிறேன். பொறுப்பில்லாமல் மகிழ்ச்சியை அனுபவி என்று பெரியார் சொன்னதைத் தானே நான் செய்திருக்கிறேன். அதில் என்ன பிரச்சினை அவர்களுக்கு?
இவ்வாறு 15 ஆண்டுகாலமாக தொடரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தேன். ஆனால் அதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. வழக்கை இழுக்க நினைக்கின்றனர். என்னை சமாளிக்க முடியாமல், என் மீது வேண்டுமென்றே அவதூறு சுமத்துகின்றனர். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி விரைவில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விஜயலட்சுமி கண்ணீர்: இந்நிலையில் தன்னை பாலியல் தொழிலாளி என குறிப்பட்டதற்கு சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT