Published : 02 Mar 2025 07:05 PM
Last Updated : 02 Mar 2025 07:05 PM
கோவை: தேர்தலுக்கான திமுக-வின் ஆயுதம் தான் மொழிப்போர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. முதல்வருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது எனத் தெரிவதில்லை. பாலியல் குற்றங்களை முதல்வரும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கின்றனர்.
போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. நாங்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போது பள்ளிக்கு வெளியில் கம்மர்கட்டு விற்பார்கள், ஆனால் தற்போது கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் பகிரங்கமாக ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து பேசியிருப்பது முதல்வருக்கு தெரிந்ததுதான்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் எதிர்பார்ப்பு. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி-யை சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரம் இருந்தும் முதல்வர் செயல்படாதது கோழைத்தனமானது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் அறிவித்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும். மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
கோவையில் பேசிய அமித்ஷா மறு சீரமைப்பு குறித்து தெளிவாகப் பேசவில்லை. மாநிலங்களில் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. கணக்கெடுப்பின் மூலம் மறுசீரமைப்பு சீராக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் நிதி வழங்க மாட்டோம் எனக் கூறுவது சரியல்ல. புதிய கல்விக் கொள்கையை ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமை.
இந்தியை கற்றுக் கொள்ளலாம், ஆனால் மத்திய அரசு திணிக்கக் கூடாது. திமுக தமிழுக்கு என்ன செய்தது. தமிழ் படிக்காமல் பட்டம் பெறலாம் என்பது தமிழ்நாட்டில் தான் உள்ளது. வெட்கக்கேடானது. தேர்தலுக்கான திமுகவின் ஆயுதம் தான் மொழிப்போர். பாமக-வின் கொள்கை ஒரு மொழிக் கொள்கை. பெண்களுக்கு பாதுகாப்பிலாத இந்த ஆட்சியை பார்த்து அவமானமாக உள்ளது. பாமக நிர்வாகி அஷோக் ஸ்ரீநிதி மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் பாமக போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT