Published : 02 Mar 2025 05:54 PM
Last Updated : 02 Mar 2025 05:54 PM

ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு: வத்தலகுண்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் மோகன் அதிரடி நீக்கம்

திண்டுக்கல்: தேனியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிலையில், வத்தலக்குண்டு அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து சந்தித்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே எம்.வாடிப்பட்டியை சேர்ந்தவர் மோகன். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளராகவும் தற்போது பிரிக்கப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோது, மோகனின் மகன் அருண்குமார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். மோகன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து வந்தார்.

சமீபத்தில் மோகன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார். இவரை மோகன் அவரது மகன் அருண்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் வரவேற்றனர். இந்த நிகழ்வை அடுத்து மோகனை அதிமுகவில் இருந்து நீக்கவேண்டும் என வத்தலகுண்டு அதிமுகவினர் குரல் எழுப்பினர். இருந்தபோதும், கட்சித் தலைமை மோகனை கட்சியில் இருந்து நீக்காததால், அவர் தொடர்ந்து ஒன்றிய செயலாளராக செயல்பட்டுவந்தார்.

இந்நிலையில் ஒன்றிய செயலாளர் மோகன் நேற்று திடீரென தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இதையறிந்த கட்சித்தலைமை அவசர அவசராக மோகனை கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டது.

தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதற்கு முன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x