Published : 02 Mar 2025 05:34 PM
Last Updated : 02 Mar 2025 05:34 PM
மதுரை: “மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கே யார் வந்தாலும், எந்த பருப்பும் வேகாது” என அமைச்சர் பி. மூர்த்திக்கு சவால் விடும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77-வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்கின்றனர் என்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அனைத்தும் தமிழகத்தில் 90 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் என்றும் முதல்வர் கூறுகிறார். மேலும் கூட்டணி, கூட்டணி என, சொல்கிறார். கொள்கை கூட்டணி என்று அவர் (முதல்வர்) தான் கூறுகிறாரே தவிர, அவருடன் கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் கூறவில்லை. இதிலிருந்தே தெரிகிறது ஏதோ வீக்னஸ் இருக்கிறது.
தமிழக அரசு மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தங்களின் கட்சிக் கொடியை கூட ஏற்ற முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நொந்து நூலாகிப் பேசுகிறார். வேங்கை வயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை. திமுக எம்எல்ஏ வீட்டில் பட்டியலின சிறுமி தாக்குதலுக்கு ஆளாகப்பட்டு இதுவரை அதற்கு தீர்வு காணவில்லை.
இந்த ஆட்சி அமையக் காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுகின்றனர். திமுக அரசை தூக்கிப்பிடித்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றைக்கு எதிர்க்கின்றனர். தமிழக முதல்வர் கை, கால் பிடித்து இந்த ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார்.
எங்கள் கட்சியை நம்பி பொதுச்செயலாளர் எடப்பாடி தான் முதல்வர் என, அதிமுகவை ஆட்சி அமைக்க யார் வருகிறார்களோ அவர்களை இணைத்துக்கொண்டு தான் களத்திற்கு போகப் போகிறோம். நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு அழைத்தோமா? என்று அவர்கள் தான் கூறவேண்டும். இந்த விவகாரம் பற்றி அவர்களிடமே கேட்க வேண்டும்.
தாய்மார்களை மதிக்கும் கட்சி அதிமுக. பெண்களுக்கு ஒரு இன்னல் என்றால் எங்கிருந்தாலும், எந்த தொல்லை வந்தாலும் அதிமுகவினர் ஆதரவாக உடன் இருப்பர். சீமான் பெண்களை வைத்துக் கொண்டே ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவரது பேச்சு அனைவரின் முகத்தையும் சுளிக்கச் வைக்கிறது. பொது இடத்தில் பெண்களைப் பற்றி அவர் மரியாதையாக பேச வேண்டும்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை. இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பும் வேகாது. சாதாரண தொண்டரை நிறுத்தினால் கூட அதிமுக வெற்றி பெறும். முதலில் மதுரைக்கு சிறப்பு நிதியை வாங்கித் தாருங்கள். திட்டங்களைக் கொண்டு வாருங்கள். நான் அமைச்சர் பி.மூர்த்திக்கு சவால் விடுகிறேன், அவர் அமைச்சராக வந்தார். கல்யாண மண்டபம் கட்டினார் என்பது பெரிதல்ல. அவர் மக்களுக்கு என்ன செய்தார். இவ்வாறு முன்னாள் அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT