Published : 02 Mar 2025 02:42 PM
Last Updated : 02 Mar 2025 02:42 PM
கோவை: “தினமும் பயன்படுத்தும் தமிழ் மொழியில் 30 சதவீதம் சமஸ்கிருதம் கலந்துள்ளது. உண்மையில் ஆங்கில மொழியால் தான் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.” என சமஸ்கிருத பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமஸ்கிருத பாரதி அமைப்பின் தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளர் அனந்த கல்யாணகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி குறித்து தமிழகத்தில் பல தரப்பிலும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமஸ்கிருத மொழியும் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. எனவே அது தொடர்பாக உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் மொழியைப் போல் சமஸ்கிருத மொழியும் மிகவும் தொன்மையானது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமஸ்கிருத மொழியும் கற்பிக்கப்படுகிறது. இதுவரை சமஸ்கிருத மொழி கற்பதால் எந்த பிராந்திய மொழியின் வளர்ச்சியும் பாதிக்கப்படவில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழியில் பக்தி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் சித்தர்கள் எழுதிய பாடல்களில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமும் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியில் 30 சதவீதம் சமஸ்கிருத வார்த்தைகள் கலந்துள்ளன. இருப்பினும் அதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி பாடதிட்டம் மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அமல்படுத்தப்படும்போது, பலர் இந்தி மொழியை மூன்றாவது மொழியாக கற்க வாய்ப்பு ஏற்படும். இதனால் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சி மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பாதிக்கப்படும்.
இருந்தபோதும் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத் தேர்வு செய்ய மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும். இதனால் ராமாயணம், பகவத்கீதை போன்றவற்றை அதன் உண்மை வடிவத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே சமஸ்கிருதம் கற்றால் தமிழ் மொழி வளர்ச்சி பாதிக்கப்படும் என சிலர் கூறி வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.
உண்மையில் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தால் தான் தமிழ்மொழியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தமிழகத்தில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தமிழ் மொழி கற்பதற்கு சிரமப்படுகின்றனர். பல வீடுகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டு கலந்து பேசப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகள் தமிழ் மொழியை சிறப்பாக கற்றுக்கொள்ளவும், மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை கற்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT