Published : 02 Mar 2025 11:17 AM
Last Updated : 02 Mar 2025 11:17 AM

சென்னை - மாம்பலம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு

சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின்கீழ், மாம்பலம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின்கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 17 ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பல்வேறு ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில், மாம்பலம் ரயில் நிலையத்தில் ரூ.14.7 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஒரு வணிக மையமாகவும், பரபரப்பான நிலையமாகவும் மாம்பலம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக தினசரி 90 மெயில், விரைவு ரயில்களும், 200 மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்துக்கு தினசரி சராசரியாக 32,000 பேர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் தற்போது, மேம்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக, கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்தப்படுகிறது. நிலையத்தில் மின்தூக்கி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, நிலையத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படும். நிலையத்தின் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்படும். இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x