Published : 02 Mar 2025 10:13 AM
Last Updated : 02 Mar 2025 10:13 AM

அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க சட்டம்: பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

‘அனைத்து வேளாண் விளைபொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க சட்டம் நிறைவேற்றப்படும்’ என்று பாட்டாளி மக்கள் கட்சி நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்படும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் சேர்க்கும் வகையிலும், அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையிலும் பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி, சென்னையில் நேற்று 18-வது ஆண்டாக பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அனைத்துப் பொருட்களையும் அரசே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வேளாண் விளைபொருட்கள் (கொள்முதல் விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல்) சட்டம் 2025 நிறைவேற்றப்படும். இதற்காக, வேளாண் வணிகம் - சந்தைப்படுத்துதல் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக தனி ஆணையம் அமைக்கப்படும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கப்படும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 வழங்கப்படும். விலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரப்படும். வேளாண் துறையில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சிப்காட் தொழிற்பேட்டைகளுக்கு நிலங்களை கையகப்படுத்தத் தடை, ரூ.10 ஆயிரம் கோடியில் நொய்யல் ஆறு மீட்புத் திட்டம், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்துவது, ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம், மணல் குவாரிகள் மூடப்படும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை நாட்கள் 150 ஆக உயர்த்தப்படும். வேளாண் பணிகளுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்படும்.

இந்த வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு 82 தலைப்புகளில் 240 ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x