Published : 02 Mar 2025 09:09 AM
Last Updated : 02 Mar 2025 09:09 AM

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் vs ஸ்ரீகாந்த் கருணேஷ் - ‘தொகுதி மறுவரையறை’ கேள்விகளும் பதில்களும்

ஸ்ரீகாந்த் கருணேஷ் | கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

“மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டால் தமிழகத்திற்கு 8 மக்களவைத் தொகுதிகள் இழப்பு ஏற்படும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய உரிமைக்குரல், இன்று தென்மாநில முதல்வர்களின் குரலாக மாறியுள்ளது. ‘தொகுதிகள் குறையாது’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி கொடுத்தாலும், தேசிய அரசியல் களத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான சூடு குறையவில்லை.

இந்த நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக திமுக தலைமைக் கழகச் செயலாளர் (செய்தி மற்றும் ஊடகத் தொடர்பு) பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், பாஜக மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் எழுப்பிய கேள்விகளும், அதற்கான பதில்களும் தொகுப்பாக இங்கே... முதலில், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஸ்ரீகாந்த் கருணேஷ்:

நாடு முழுவதும் 2021-ல் எடுத்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்னும் தொடங்கப்படாததன் மர்மம் என்ன?

கோவிட் தாக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மருத்துவ, பொருளாதார, சீரமைப்பு நடவடிக்கைகளால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உலக நாடுகள் அனைத்திலும் தாமதமாகி உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் பாரதத்தில் நடத்தப்படும். அதேசமயம், தமிழகத்தின் சாதிவாரி மற்றும் சமூக அடிப்படையிலான மக்கள் தொகை ஆய்வுகள் செய்த நீதியரசர் குலசேகரன் ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்காமல் மூடு விழா நடத்தியதுடன், சாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படுத்தாமல் மூடி மறைத்ததன் மர்மத்தை நீங்கள் விளக்க வேண்டும்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழக எம்பி-க்கள் எண்ணிக்கை குறையும் என முதல்வர் ஸ்டாலின் உரிய தரவுகளுடன், தெளிவாக விளக்கியுள்ளார். நாட்டின் வார்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டிப்பது போல, தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயம்தானா?

தமிழக முதல்வருக்கு, மக்கள் தொகைக் கணக்கெடுப்புதான் தொகுதி சீரமைப்புக்கான அடிப்படை என்று சொல்லிய மகான் யார்? இதற்கு ஒற்றை ஆதாரத்தையாவது கொடுங்கள் என்று தமிழக முதல்வரிடம் எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார். இதற்கு பதில் இல்லை.

அதோடு, தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 18 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள தென் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 132. அதாவது மக்களவையில், 25 சதவீத உறுப்பினர்களை தென்மாநிலங்கள் கொண்டுள்ளது. இந்த பங்களிப்பு தொடரும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறிய பிறகும், முதல்வர் அவதூறு பரப்புவது அரசின் அறியா நிலையை அறிவிக்கிறது; அரசியல் லாபநோக்கைத் தெரிவிக்கிறது.

புதிய பாராளுமன்ற கட்டிடம் 848 உறுப்பினர்கள் அமரும் வகையில் கட்டியதன் அரசியல் கணக்கீடு என்ன?

மார்ச் 2010-ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு 1,200 கோடி செலவில் ஜெர்மன் கட்டிடக்கலை நிபுணர்கள் வடிவமைப்பில் கட்டிய சட்டசபைக் கட்டிடம். (தற்போது பல்நோக்கு மருத்துவமனை) 320 இருக்கைகள் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டது ஏன்?

நமக்கு 234 சட்டமன்ற உறுப்பினர்கள் தானே? இதில் என்ன அரசியல் கணக்கீடு என்று கேட்டால், வருங்காலத் தேவையை, வளர்ச்சியை கணக்கிடும் கலைஞரின் தொலைநோக்குப் பார்வை என்பீர்கள். அதாவது, உங்களுக்கு வந்தா ரத்தம்... மத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்டினி... அப்படித்தானே.

அமெரிக்காவில் 1913-லிருந்து இன்று வரை, சரிசம சதவீத பங்கீட்டு முறையை பின்பற்றி, மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆக தொடர்கிறது. இருபதுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நம் நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தொகுதி மறுவரையறை திட்டத்தை உருவாக்க ஒன்றிய அரசு ஏதேனும் முயற்சி எடுக்குமா?

ஜனநாயகத்தின் ஜோதியாக விளங்கும் பாஜக-வின் பாரத மாடலை உலகமே பின்பற்றுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பாரத மாடல் பாடம் எடுக்கிறது. 1913-லிருந்து அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 435 என்ற அளவிலேயே உள்ளது என்றால், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவே இல்லை. அப்படியானால் மறுவரையறைக்கு என்ன அவசியம்? பேராசிரியருக்கு என்ன குழப்பம்?

இருபதுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் நம் நாட்டில் அனைத்து இன மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வேண்டும் என்றால், தமிழகத்திற்கு மாநிலப் பிரதிநிதித்துவம் வேண்டாமா? அதேபோல தமிழகத்தில் வாழும் மக்களுக்கு இன அடிப்படையில் சட்டமன்ற பிரதிநிதித்துவம் கேட்டால் திமுக அரசு ஏற்குமா?

ஒருவேளை, முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல், தமிழ்நாட்டை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமைந்தால் தமிழக பாஜக-வின் நிலைப்பாடு என்ன?

மறுபடி ஹேஷ்யம், முகாந்திரம், ஆதாரம் இல்லாத, கற்பனையான, அடிப்படைப் புரிதலற்ற, வெட்டியான திண்ணைப் பேச்சு... எங்கள் உறுதியான நிலைப்பாடு, தமிழகம் பாதிக்கப்படாது.

இனி, ஸ்ரீகாந்த் கருணேஷ் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்:

திமுக அங்கம் வகித்த மத்திய யுபிஏ ஆட்சிக் காலத்தில் (2011) நாடு முழுவதும் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஏன் வெளியிடவில்லை? தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை?

யுபிஏ ஆட்சியில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், பல்வேறு முரண்பாடுகள் இருந்தால் வெளியிடப்படவில்லை. அதேசமயம், இந்த கணக்கெடுப்பு மூலமாக சமூக பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் அடையாளம் காணப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. நாங்கள் தந்த அந்த தரவுகளின் அடிப்படையில் தான் மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறது.

அதோடு, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில்தான், தமிழக முதல்வர். ஒன்றிய பாஜக அரசை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமாக 550 எம்பி-க்கள் என அரசியலமைப்புச் சட்டம் 81-வது பிரிவு உறுதி செய்கிறது. இதை அதிகரிக்கும் போது, அதற்கான சட்டத் திருத்தங்களும் கொண்டு வரப்பட வேண்டும். அப்படி இருக்கையில் தற்போதே தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படுவதாக கூறி திமுக அரசியல் ஆதாயம் தேடுவது ஏன்?

கடந்த 2002-ல் கொண்டுவரப்பட்ட 84-வது சட்ட திருத்தப்படி 2026-ல் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதனடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில் தன்னாட்சி உரிமை பெற்ற நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் எல்லாம் செயல்படும் அழகைப் பார்த்தாலே, நீங்கள் அமைக்கும் தொகுதி மறுவரையறை குழு எப்படி செயல்படும் என்பதை உணர்ந்துள்ளோம். அதற்கேற்ப உரிமைக்குரல் எழுப்புகிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு, மறுசீரமைப்பு தொடர்பான சட்டங்கள் அனைத்தும் யுபிஏ ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. பாஜக ஆட்சியில் இவை கொண்டு வரப்படாத போது தேவையற்ற அச்சம் எதற்காக?

பாஜக ஆட்சியில் நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக, 15-வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்கிடம் 1971 மக்கள் தொகை அடிப்படையிலே நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். ஆனால், 2011 மக்கள் தொகை அடிப்படையாக கொண்டு, நிதி ஒதுக்கீடு செய்ததால், தமிழகம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசின் வரிப் பகிர்வு ரூ 1,92,725 கோடி மட்டுமே கிடைக்கிறது. ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டும் ரூ.2,18,816 கோடி பெறுகிறது. அரசியல் லாபத்திற்காக ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய தயங்காதவர்கள் நீங்கள்.

மும்மொழி திட்டத்தில் திமுக-வின் நிலைப்பாட்டிற்கு தமிழகத்தில் கிடைத்த எதிர்ப்பை உணர்ந்த பிறகு, அவசர, அவசரமாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஆதாரமற்ற தகவலை தெரிவித்து, போலியான கட்டமைப்பை முதல்வர் ஸ்டாலின் உருவாக்க முயற்சிக்கலாமா?

தெலங்கானா மாநிலத்தில் 2023 அக்டோபர் 8-ம் தேதி நடந்த கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்களில் 100 தொகுதிகள் குறையும் என்று சொன்னது சாட்சாத் பிரதமர் நரேந்திர மோடி தானே. இதை வழிமொழியும் வகையில், 2024 தேர்தல் பிரச்சாரத்தில், “எங்களோடு இணைந்து நிற்காவிட்டால் உங்களுக்கு பேரிழப்பு ஏற்படும்” என பாஜக தலைவர் நட்டா, அநாகரிகமாக மிரட்டல் விடுத்தார். இவை இரண்டும் ஆதாரமற்ற தகவலா?

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகம், உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது” என்று உறுதியளித்த பின்பும், தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என்று முதல்வர் ஸ்டாலின் புரிதல் இல்லாமல் பேசுவது சரியா?

மக்கள் தொகை பெருக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநில முதல்வர்கள் அனைவரும் நமது முதல்வரின் நியாயமான குரலுக்கு ஆதரவாக. போர்க்குரல் எழுப்பியுள்ளனர். இதில் இருந்து. நமது முதல்வர் சரியான நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்துள்ளார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து. கொண்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x