Published : 02 Mar 2025 07:26 AM
Last Updated : 02 Mar 2025 07:26 AM
சென்னை: கல்லூரி பேராசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) முன்னேற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.
மாநிலத் தகுதித் தேர்வான செட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு வரும் மார்ச் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 133 தேர்வு மையங்களில் 99,178 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் பயிற்சி தேர்வுக்கான இணையதளம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) கடந்த மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி இதுவரை 67,865 தேர்வர்கள் தங்களுடைய தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களை தேர்வர்கள் கேட்டு தெளிவுபெற தொலைபேசி வாயிலான உதவி மையம் 7 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. தேர்வர்கள் 1800 425 6753 என்ற இலவச உதவி எண் மற்றும் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்புகொண்டு தங்கள் தேர்வு சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் சந்தேகங்களை தெளிவு பெற்றுக் கொள்ளலாம். மேலும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான நேரடி உதவிமையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இத்தேர்வை எந்தவித தடைகளும் இல்லாமல் நடத்துவதறகான ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலர் தலைமையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற காணொலி வாயிலாக நடைபெற்றது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் சிறப்பாக செய்ய தலைமைச்செயலர் நா.முருகானந்தம் அப்போது அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், உயர்கல்வித் துறை செயலர் சி.சமயமூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ச.ஜெயந்தி, கல்லூரி கல்வி ஆணையர், எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT