Published : 02 Mar 2025 07:15 AM
Last Updated : 02 Mar 2025 07:15 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
யோகா பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் பல்வேறு நன்மைகளை தருகிறது. குறிப்பாக, உடல் வலிமை, ஆற்றல் அளவு, மன அமைதி மேம்படுகிறது. தினமும் யோகா பயிற்சி செய்வதால், பல்வேறு நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், புத்துயிர் பெறவும் உதவுகிறது. அனைத்து தரப்பு மக்களும் யோகா பயிற்சியை மேற்கொள்ளும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆயுஷ் தேசிய நல்வாழ்வு மையங்களில், 650 இருபாலர் யோகா பயிற்றுநர்கள் மற்றும் 650 பெண் யோகா பயிற்றுநர்கள் என 1,300 பேரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஜயலட்சுமி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், யோகா பயிற்றுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். பகுதிநேர அடிப்படையில் நியமிக்கப்படும் அவர்களுக்கு, ஒரு மணி நேரத்துக்கு ரூ.250 வீதம் மாதத்துக்கு 32 வகுப்புகளுக்கு ரூ.8,000 வழங்க வேண்டும். இதில், 20 வகுப்புகள் மருத்துவமனைகளிலும், 12 வகுப்புகள் பள்ளிகள், முகாம்களில் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மட்டும் வகுப்புகள் நடத்துபவர்களுக்கு, மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும். இதன்படி, யோகா பயிற்றுநர்கள் நியமிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT