Published : 02 Mar 2025 06:45 AM
Last Updated : 02 Mar 2025 06:45 AM
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: பல்லாண்டு தொடர்ச்சியாக நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் வகையில் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியையும் இறைவன் அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை பெற வாழ்த்துகிறேன்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்: நாட்டுக்கு சேவையாற்றும் வகையில் மகிழ்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட கால இனிமையான வாழ்க்கையை இறைவன் அருள வாழ்த்துகிறேன்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடனும், தமிழக மக்களுக்குத் தொண்டாற்றுவதில் தொடர் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். இந்தியாவின் வளமான பன்மைத்துவத்தையும், கூட்டாட்சி அமைப்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து நிற்கிறோம்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழக மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருளால் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும் தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்னாளில் வாழ்த்துகிறேன்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் நாம் ஒன்றாகப் போராடுவோம்.
துணை முதல்வர் உதயநிதி: `இளைஞரணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் திமுக தலைவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம். மக்கள்நலன் போற்றும் திமுக ஆட்சி 2026-ல் மீண்டும் அமைந்து அவரே முதல்வராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், அவரது மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டுறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நல்ல உடல் நலத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.
உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் சகல துறைகளிலும் முதன்மை பெற அயராது பணியாற்ற உடல்நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர் எல்.முருகன், ஹேமந்த் சோரான், பினராயி விஜயன் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாமக தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
இவ்வாறு வாழ்த்து கூறியவர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT