Published : 01 Mar 2025 05:09 PM
Last Updated : 01 Mar 2025 05:09 PM
வட சென்னையில் மின் வாரியத்தால் நிறுவப்பட்டுள்ள 1,220 மின் மாற்றிகளை சுற்றி ரூ.45 கோடியில் கண்கவர் தடுப்பு சுவர் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதைத் தடுக்க வடசென்னை பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகளை சுற்றி கண்கவர் தடுப்பு சுவர்களை மாநகராட்சி அமைத்து வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: சென்னை மாநகரில் தடையற்ற மின்சாரம் வழங்க சாலையோரங்களில் மின் வாரியம் சார்பில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றை சுற்றி எந்தவிதமான தடுப்புச்சுவரும் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. அவ்வாறான இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டி, மாநகரின் அழகை கெடுக்கும் வகையில் இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், கண்கவர் வண்ணங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது வட சென்னையல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய 7 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள 1,220 மின் மாற்றிகளை சுற்றி ரூ.45 கோடியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT