Published : 01 Mar 2025 12:55 PM
Last Updated : 01 Mar 2025 12:55 PM
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் 24-ம் தேதி முதல் காலவறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில், “கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது வரலாற்றுப் பிழை. அதை திரும்பப் பெறுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும்” என மீனவ பிரதிநிதிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் சொல்லமுடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இங்கிருக்கும் அரசியல் கட்சிகளோ தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கும் அம்சமாகவே கச்சத்தீவு விவகாரத்தைக் கணக்கில் வைத்திருக்கின்றன.
இந்த நிலையில், அண்மைக்காலமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையும் இலங்கை அரசும் நடத்தும் விதம் வேறு மாதிரியாக இருக்கிறது. எல்லை தாண்டி பிடிபடும் மீனவர்களுக்கான தண்டனையையும், அபராதத்தையும் கடுமையாக்கி இருக்கிறது இலங்கை. இது தமிழக மீனவர்களை மேலும் தகிக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் நல்லதம்பி, “1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது முதலே நமக்குப் பிரச்சினைதான். 1983-ல் இலங்கை இனக்கலவரம் வெடித்த பிறகு நமது மீனவர்களை நோக்கி இலங்கைக் கடற்படை துப்பாக்கிகளை திருப்பியது. இதுவரை நமது மீனவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கில் அங்கஹீனம் ஆகிக் கிடக்கிறார்கள். சுமார் 700 விசைப்படகுகள் உள்ளிட்ட மீனவர்களின் சொத்துகள் பறிபோயிருக்கின்றன.
பாக் நீரிணையானது 7 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமாகும். இந்திய - இலங்கைக்கு இடையிலான இந்த பாக்நீரிணையானது. 10,500 சதுர கிலோ மீட்டர் கொண்ட கடல் பிராந்தியமாகும். கச்சத் தீவை தூக்கிக் கொடுத்ததால் இதில் 3,000 சதுர கிலோ மீட்டர் மட்டுமே இப்போது நம்மிடம் உள்ளது. இதனால் பாக் நீரிணை பகுதியை நம்பி இருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வா தாரமே கேள்விக் குறியாகி அவர்கள் இன்றளவும் வணிக கூலிகளாகவே உள்ளனர்.
கச்சத் தீவு ஒப்பந்தத்தின் ஆறாவது ஷரத்தில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை கொடுக்கும் ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. ஆனபோதும் நம்மிலும் சிறிய நாடான இலங்கையிடம் பேசி அந்த உரிமையை நிலைநாட்ட மத்தியில் ஆளும் அரசுகள் அக்கறை காட்டவில்லை. அந்த விதத்தில் அனைத்துக் கட்சிகளுமே தமிழக மீனவர்களை முதுகில் குத்திய துரோகிகள் தான்.
போதாதுக்கு, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது ராஜதந்திரம் என்கிறார் செல்வப்பெருந்தகை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது ராஜதந்திரம் அல்ல; வரலாற்றுப் பிழை. 1960-ல் கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்படும் பங்களாதேஷிடம் இருந்த பெருபாரி தீவை அது இந்தியாவுக்குச் சொந்தமானது என அப்போதைய மேற்குவங்க முதல்வர் வி.சி.ராய், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடி அதை மேற்கு வங்கத்துடன் இணைத்த வரலாறுகள் உள்ளன. அதைப் போல கச்சதீவையும் மீட்பது சாத்தியமே.
மீனவர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய விரும்பினால், அரசியலுக்கு அப்பாற்பட்டு, விருப்பு வெறுப்பின்றி, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்து குரல்கொடுத்து போராடி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கச்சத்தீவை மீட்க ஆவன செய்யுங்கள். அல்லது குறைந்தபட்சம், 6-வது ஷரத்தில் தெரிவித்துள்ளபடி கச்சத்தீவு பகுதியில் நமது மீனவர்களுக்கான மீன்பிடி உரிமையையாவது நிலைநாட்டுங்கள்” என்றார். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் தமிழக மீனவர்களை கண்ணீரில் மிதக்கவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறது இந்திய அரசு?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT