Published : 01 Mar 2025 12:57 PM
Last Updated : 01 Mar 2025 12:57 PM
திமுக தலைவர் ஸ்டாலினின் திமுக கட்டமைப்பு சீரமைப்பு நடவடிக்கையில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் நீக்கப்பட்டு அந்த இடத்தில் முன்னாள் எம்எல்ஏ-வும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான கே.எஸ்.மூர்த்தி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.
தன்னை உதயநிதியின் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டு டாம்பீகம் செய்துவந்த மதுரா செந்தில் மா.செ. பதவியிலிருந்து தூக்கப்பட்டதை மாவட்ட திமுக-வினர் இன்னமும் வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் மீது தலைமைக்கு அப்படி என்ன வருத்தம் என மாவட்ட திமுகவினர் சிலரிடம் பேசினோம். “நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குள் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. 2021 தேர்தலில் பரமத்தி வேலூர், குமாரபாளையம் தொகுதிகளில் திமுக தோற்றுப் போனது. திருச்செங்கோட்டில் மட்டும் கூட்டணி கட்சியான கொமதேக குறைந்த வித்தியாசத்தில் வென்றது.
பரமத்தி வேலூர் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிட்ட நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தியாலேயே ஜெயிக்க முடியவில்லை” என்று சொன்ன அவர்கள், “இந்த அதிருப்தியால் கே.எஸ்.மூர்த்தியை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது தலைமை. அவருக்குப் பதில், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளரான மதுரா செந்தில் மாவட்டச் செயலாளராக தேர்வானார்.
இதனிடையே, மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க மதுரா செந்தில் காய்களை நகர்த்திய சமயத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நாமக்கல் தொகுதி எம்எல்ஏ-வான பெ.ராமலிங்கமும் எல்லை தாண்டி செந்திலுக்குப் போட்டியாக மா.செ. பதவிக்கு மனு போட்டார். இதன் பின்னணியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி இருந்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. இதனால் மதுரா செந்திலுக்கும் ராஜேஸ்குமாருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. மதுரா செந்தில் மாவட்டச் செயலாளராக வந்த பிறகு இந்த உரசல் மேலும் உக்ரமானது.
ஒரு கட்டத்தில், ராஜேஸ்குமார் மீது மதுரா செந்தில் அடுக்கடுக்கான புகார்களை கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். இதையெல்லாம் சகித்துக் கொண்ட உதயநிதியின் குட்புக்கில் இருக்கும் ராஜேஸ்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு, முன்னாள் மாவட்டச் செயலாளரான கே.எஸ்.மூர்த்தியை முதல்வரிடம் நேரில் அழைத்துச் சென்று பேசவைத்துள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் மதுரா செந்தில் நீக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்ட சமயத்தில் அங்கு பிரச்சாரத்துக்குச் சென்ற முதல்வர், மதுரா செந்திலை அழைத்து கட்சி வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தும்படி கண்டிப்புடன் சொன்னதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகும் மதுராவை பற்றி தலைமைக்கு திருப்தியான ரிசல்ட் போகாததாலேயே இந்த மாற்றம் என்கிறார்கள். இதில், மூர்த்தியும், செந்திலும் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திச்செல்வனின் வளர்ப்புகள் என்கிறார்கள்.
“முன்பு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் பரமத்தி வேலூர் எம்எல்ஏ-வாகவும் இருந்த சமயத்தில் அதிமுக அமைச்சர் தங்கமணியுடன் மறைமுக நட்பில் இருந்து, தான் நினைத்த காரியங்களை சாதித்துக் கொண்டவர் தானே இந்த மூர்த்தி” என இப்போதே கொளுத்திப் போட ஆரம்பித்துவிட்டார்கள் மூர்த்தியின் ‘அன்பான’ எதிரிகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT