Published : 01 Mar 2025 06:18 AM
Last Updated : 01 Mar 2025 06:18 AM

சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சருக்கு எதிர்ப்பு: மாணவர் கூட்டமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்த மஜூம்தாரை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் காந்தி மண்டபம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்எல்ஏ தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மத்திய கல்வி இணை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசியக் கல்வி கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான், தமிழகத்துக்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு, தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகை தருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, திமுக மாணவர் அணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்த, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் வருகை ரத்தானது. மாறாக இணை அமைச்சர் சுகந்த மஜூம்தார் வருகை தந்தார். இதையடுத்து, மத்திய இணை அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை ஐஐடி அருகே, காந்தி மண்டபம் முன்பு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், ‘இந்தி தெரியாது போடா’, ‘இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்’, ‘நாங்கள் உருவாக்கிய பல்கலைக்கழகங்களில் ஆளுநர் என்ன நாட்டாமையா’, ‘எங்கள் பட்டங்கள் செல்லாது என சொல்ல உனகென்ன அதிகாரம்’, ‘எங்கள் அண்ணா தந்த இருமொழி கொள்கை எங்களுக்கு போதும்’, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, ‘கெட் அவுட் மோடி’ என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, சாலை மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், அனைவரும் சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சென்னை ஐஐடி அருகே நேற்று பரப்பரப்பான சூழல் நிலவியது.

போராட்டத்தின் போது சி.வி.எம்.பி.எழிலரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசை கண்டித்து கடந்த 25-ம் தேதி தமிழகம் முழுவதும் 68 இடங்களில் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் தமிழகத்தில் ஓயப்போவதில்லை.

1965 போல தமிழகத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. போராட்டத்தை முடித்து வைப்பது மத்திய பாஜக அரசின் கையில் தான் உள்ளது. எனவே, தமிழகத்துக்கு ஏற்கெனவே வழங்குவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிதியை உடனே வழங்க வேண்டும்,’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x