Published : 01 Mar 2025 07:16 AM
Last Updated : 01 Mar 2025 07:16 AM
சென்னை: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தலைமை தாங்கினார். மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு முதல் கொள்கை கூட்டணி அமைத்து போராடி வருகிறோம். கருத்தியல் கூட்டணி அமைத்துள்ள எங்களுக்கு கருத்து மாறுபடுகள் வரும். ஆனால், ஒருபோதும் விரிசல் வராது. நமது ஒற்றுமையை பாரத்து இதில் விரிசல் வராதா என்று சிலர் எதிர்பார்க்கலாம். அவர்கள் ஆசையில்தான் மண் விழும். என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துள்ள தோழமைக் கட்சி தலைவர்களை எனது இதய மேடையில் வைத்துள்ளேன். நமது ஒற்றுமை, தமிழகத்தின் உரிமையை, சமூகநீதியை, தமிழகத்தை ஏன் ஒட்டுமொத்த இந்தியாவையே காப்பாற்றியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தப்பித்தவறி ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பாஜவிடம் அடகு வைக்கப்பட்டிருக்கும். பாஜக அதிமுகவை மிரட்டி கபளீகரம் செய்திருக்கும். இந்த கொடிய சக்திகளிடமிருந்து தமிழகத்தை மீட்ட கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டும் கூட்டணி நமது கூட்டணி.
மத்திய அரசு எப்படியெல்லாம் தமிழகத்தை வஞ்சிக்கலாம் என செயல்படுகிறார்கள். நீட் தேர்வை கொண்டுவந்தனர். புயல் வெள்ள நிவராண நிதி தருவதில்லை. கல்வியை சீர்குலைக்க தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். நாம் அதை ஏற்கவில்லை. உடனே கல்விக்கான நிதி தரமாட்டோம். என்கிறார்கள். வேதனையுடன் சொல்கிறேன். குழந்தைகளின் கல்விக்கும் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும் நிதி தராத கொடூர மனம் படைத்தோரின் ஆட்சி அதிகாரம் நடக்கிறது.
எங்கள் மீது இந்தியை திணிக்காதீர்கள். தாய்மொழி தமிழ். உலக தொடர்புக்கு ஆங்கிலம். இது எங்களுக்குப் போதும். தேவைப்பட்டால் இந்தி மொழி அல்ல; அரபு மொழியைக் கூட கற்றுக்கொள்வோம். தமிழக முன்னேற்றத்துக்கு இருமொழிக் கொள்கைதான் காரணம். இதை வடமாநிலத்தினர் ஏற்றக்கொள்கிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பது தமிழகம்தான். எங்களை மிரட்டினாலும் உங்களால் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டலுக்கு ஒருபோதும் திமுக அடங்கிப்போகாது.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க முயற்சி செய்கிறார்கள். இப்போது பொத்தாம் பொதுவாக தமிழகத்தில் எண்ணிக்கை குறையாது என்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்குமா இல்லையா என்பது தெரியாது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலம் ஏன் பாதிக்கப்பட வேண்டும். ஏன் இது விஷயமாக பிரதமர் உறுதி அளிக்கவில்லை. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படாது. 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில்தான் மேற்கொள்ளப்படும் என்று உறுதி கொடுங்கள். இந்த விவகாரத்தில் உரிமை குரலை தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் எழுப்பியுள்ளன. மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும்.
இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக பாஜகவும் பங்கேற்று தமிழகத்துக்கு துணையாக இருக்க வேண்டும். அதன்மூலம்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். இவ்வாறு பேசினார்.
விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.காதர்மொகிதீன், விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஜி.எம்.தர் வாண்டையார், தமிழ்நாடு விவசாயிகள்- தொழிலாளர் கட்சி தலைவர் பொன்.குமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் சு.க.முருகவேல் ராஜ், மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், தமிழ்மாநில தேசிய லீக் பொதுச்செயாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி பி.என். அம்மாசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், நாடாளுமன்ற, பேரவை உறுப்பினர்கள், சென்னை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாலவாக்கம் த.விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT