Published : 01 Mar 2025 06:50 AM
Last Updated : 01 Mar 2025 06:50 AM
சென்னை: மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை குறைக்கும் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்: மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று 16-ம் நிதி ஆணையத்தை கேட்டு கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான மத்திய இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதனால் மாநிலங்களின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.
மத்திய அரசுக்கு மிக அதிகமாக வரி செலுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். ஆனால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் பங்கு மிகவும் குறைவாகும். எடுத்துக்காட்டாக, மத்திய அரசுக்கு வரிகள் மூலம் ரூ.100 வருமானம் கிடைத்தால், அதில் இதுவரை ரூ.41 மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. அவ்வாறு தமிழகத்துக்கு வெறும் ரூ.1.64 மட்டுமே கிடைக்கிறது. மத்திய அரசின் வரி வருவாய்க்கு தமிழகம் ரூ.7 முதல் ரூ.8 வரை பங்களிக்கும் நிலையில், அதில் நான்கு அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டும்தான் தமிழகத்துக்கு கிடைக்கிறது. இதை குறைத்தால் தமிழகத்தின் பங்கு ரூ.1.64-க்கு பதில் ரூ.1.60 ஆக குறையும். இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும்.
மாநிலங்களுக்கான பங்கை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி வரும் நிலையில் அதை குறைக்க முயல்வது நியாயமல்ல. மத்திய அரசுக்கான வருமானம் முழுவதும் மாநிலங்களில் இருந்துதான் கிடைக்கிறது. அவ்வாறு இருக்கும்போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். இத்தகைய பரிந்துரைகளை நிதி ஆணையமும் ஏற்கக்கூடாது. மாறாக, மாநிலங்களுக்கான பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை: இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி பகிர்வை 15-வது நிதிக்குழு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்து வருகிறது. இதனால், 1976 முதல் மத்திய அரசின் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மிகச் சிறப்பாக செய்து வரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் நிதி பகிர்வில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசால் அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நிதிப் பகிர்வை குறைக்க மத்திய அமைச்சரவை மார்ச் மாத இறுதியில் ஒப்புதல் வழங்கிய பிறகு இது நடைமுறைக்கு வரும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த 1 சதவீத நிதி பகிர்வு குறைப்பால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரதமரின் கவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT