Published : 01 Mar 2025 06:39 AM
Last Updated : 01 Mar 2025 06:39 AM
புதுடெல்லி: சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து விசாரணை நடத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு வாரத்துக்குள் நியமித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட துறைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ். ஓஹா, உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வி்ல் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலை கடத்தல் வழக்குகளின் கோப்புகள் மாயமானது குறித்து பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரே எப்ஐஆராக மாற்றப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மனுதாரரான வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், இந்த விவகாரத்தி்ல இரண்டாவது எப்ஐஆர்-ஐ ஏன் பதிவு செய்ய வேண்டும்?. அதில் தான் சந்தேகம் வருகிறது. சிலை கடத்தல் வழக்குகளி்ல் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி விசாரணை கைவிடப்பட்டுள்ளதாக கூறுவது சட்டவிரோதம். ஏனெனில் நீதிமன்றம் மூலமாகவே ஒரு வழக்கை கைவிட்டதாக அறிவிக்க முடியும், என்றார்.
அதையடுத்து இதுதொடர்பாக நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளி்த்த தமிழக அரசின் வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘ சிலை திருட்டு வழக்குகளின் கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதியப்பட்ட எப்ஐஆர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாயமான நேரத்தில் சிலை கடத்தல் பிரிவில் பணியில் இருந்து போலீஸ் அதிகாரிகள் இடமாறுதலில் சென்று விட்டனர். இதனால் கோப்புகள் மாயமான சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் அடையாளம் காண முடியவில்லை. சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்களைக் காணவில்லை என மனுதாரர் கூறுவது தவறானது. 11 வழக்குகளின் ஆவணங்கள் தங்களிடம் உள்ளன, என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் இந்த நிலைப்பாடு திருப்திகரமாக இல்லை என கருத்து தெரிவித்தனர். மேலும் கோப்புகள் மாயமான விவகாரத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியை ஒரு வார காலத்துக்குள் நியமித்து, அவரது தலைமையில் விசாரணை நடத்தி ஏப்ரல் முதல் வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT