Published : 01 Mar 2025 06:14 AM
Last Updated : 01 Mar 2025 06:14 AM

இன்று 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: சென்னையில் தொண்டர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தும் அவர், அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று காலை முதலே அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீராமானுஜ எம்பார் ஜீயர் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து வாழ்த்தினர்.

தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீ்ப் ராய் ரத்தோர், உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை காவல் ஆணையர் அருண் மற்றும் அதிகாரிகள், மநீம தலைவர் கமல்ஹாசன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா, சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்காக, தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை குழு உறுப்பினர் தீபக் நாதன் உள்ளிட்டோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்க உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் உரிய பிரதிநித்துவம் வழங்கப்படும் என அறிவித்தேன். இன்று மாற்றுத் திறன் தோழர்கள் என்னை அரவணைத்து கைகளை இறுகப் பற்றி நன்றி தெரிவித்தபோது, என் பிறந்தநாள் பரிசை பெற்றதாக உணர்ந்தேன்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். பிறகு, காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வரும் அவருக்கு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல தலைவர்களும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x