Published : 28 Feb 2025 09:11 PM
Last Updated : 28 Feb 2025 09:11 PM

சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து சர்ச்சை கருத்து: மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்

போக்சோ சட்ட திறன் வளர்ப்பு பயிற்சியில் உரையாற்றிய ஐஏஎஸ் அதிகாரி மகாபாரதி

மயிலாடுதுறை: மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை மாற்றி தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு பயிற்சியை தொடங்கிவைத்து பேசும்போது, “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் குழந்தைகளின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை கவனமாக கையாள வேண்டும். காவல் துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது, அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல் துறையினர் எடுக்க வேண்டும்.

காவல் துறையினர் இந்த பயிலரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஒரு குழந்தையை கையகப்படுத்தும் காவல் துறை அலுவலரின் கடமைகள், செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத செயல்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ) ரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்ச்சைக் கருத்து: இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பேசும்போது, “கடந்த வாரம் மூன்றரை வயது குழந்தைக்கு எதிராக நடந்த சம்பவத்தில் கூட, அந்த குழந்தையே தவறாக நடந்திருக்கிறது. அதை கவனித்துப் பார்த்தால் தெரியும். எனக்கு கிடைத்த அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட குழந்தை, அந்தப் பையனை அன்று காலையில் முகத்தில் துப்பியிருக்கிறது. அதுதான் காரணம். எனவே, இரண்டு பக்கமும் நாம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, இதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம். எனவே, பெற்றோர்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

ஆட்சியர் மாற்றம்: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். எனினும், மகாபாரதி எங்கு, எந்தத் துறைக்கு மாற்றப்பட்டார் என உடனடியாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x