Published : 28 Feb 2025 08:50 PM
Last Updated : 28 Feb 2025 08:50 PM
ஜோலார்பேட்டை: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்ட இளைஞர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்ப்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியது: கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் திருப்பூரைச் சேர்ந்த 28 வயதுள்ள கர்ப்பிணி பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியாக பயணம் செய்தார். நள்ளிரவு 12.10 மணிக்கு வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே விரைவு ரயில் வந்தபோது கர்ப்பிணி பெண் ரயில் பெட்டியில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது அங்கிருந்த கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவர் கர்ப்பிணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
அப்போது, கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த ஹேமராஜ் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றார். கீழே விழுந்த அதிர்ச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்கு கால், கை எலும்பு முறிந்தது.இதையடுத்து, அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது 4 மாத கரு சிதைந்தது. பிறகு கர்ப்பிணிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட ஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கீழே விழுந்ததில் கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததால் 4 மாத சிசுவை கொன்றதாக ஹேமராஜ் மீது ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு, ஓடும் ரயிலில் பெண்களை குறித்து வைத்து தொடர்ந்து இதுபோன்ற பாலியல் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வந்த ஹேமராஜ் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே எஸ்.பி. ஈஸ்வரன் பரிந்துரைத்தார்.
அதன் பேரில் ஹேமராஜ் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்தனர். அதற்கான உத்தரவு நகலை வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேமராஜுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே காவல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT