Last Updated : 28 Feb, 2025 08:10 PM

 

Published : 28 Feb 2025 08:10 PM
Last Updated : 28 Feb 2025 08:10 PM

சூரியனின் வெளிப்புறத்தில் ஒளிவெடிப்பு படம் பிடித்து அசத்திய ஆதித்யா விண்கலம்!

சென்னை: சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2023 செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாக கொண்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து அரிய தகவல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூட் எனும் சாதனம் சூரியனின் வெளி அடுக்குகளில் இதுவரை அறியப்படாத ஒளி வெடிப்பு சிதறலை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலார் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனும் சூட் கருவியானது சூரியனின் போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் குறித்தும், அதன்மூலம் ஏற்படும் கதிர்வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரின் படங்களை அந்தக் கருவி தொடர்ந்து எடுத்து அனுப்பி வருகிறது. பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு ஆற்றல் வெளிப்படும். இதை சோலார் ப்ளேர்(Solar Flare) என்று அழைக்கப்படும். சமீபத்தில் அத்தகைய ஒளி வெடிப்பு சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி படம் பிடித்துள்ளது. அந்த தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும். இதன் மூலம் விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது. சூட் கருவி புனேவில் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் இயற்பியல் மையத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டதாகும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x