Published : 28 Feb 2025 06:02 PM
Last Updated : 28 Feb 2025 06:02 PM

ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதி பொதுக் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பு - அதிமுகவினரிடம் கூடும் எதிர்பார்ப்பு

இபிஎஸ் - கோப்புப் படம்

மதுரை: ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதி பொதுக் கூட்டத்தில் இபிஎஸ் பங்கேற்க உள்ள நிலையில், கூட்டத்தில் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை அதிமுகவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் நாளை மறுநாள் (மார்ச் 2) நடக்கும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி என்ன பேசப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தப் பொதுக் கூட்டம் அதிமுகவை தாண்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் தேனி மாவட்ட அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடபுதுப்பட்டியில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.

பொதுவாக இதுபோன்ற பொதுக் கூட்டங்களில், தலைமை கழக சிறப்பு பேச்சாளர்கள், முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள். ஆனால், 2-ம் தேதி வடபுதுப்பட்டியில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி பங்கேற்று பேசவுள்ளார். பெரியகுளம் சட்டசமன்ற தொகுதியை அவர் தேர்ந்தெடுத்ததற்கு அத்தொகுதி ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் உள்ள தொகுதி என்பது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தப் பொதுக் கூட்டம், அதிமுகவை தாண்டி, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தை மாநாடு போல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா, தேனி மேற்கு மாவட்ட எஸ்கேடி.ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இக்கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட தென் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

இது குறித்து முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி கே.பழனிசாமி கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்தாலும், அவர், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டது. அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, தற்போது கட்சியின் ஒற்றை தலைமையாக கே.பழனிசாமி நீடிக்கிறார். ஆனால், அவரால் எதிர்பார்த்த வெற்றியை கடந்த மக்களவைத் தேர்தலில் பெற முடியவில்லை. தொண்டர்களும் கடந்த காலத்தை போல் வெற்றியை பெற முடியாததால் ஒரு வித சோர்வுடன் இருந்தது உண்மைதான். ஆனால், தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக ஆட்சியின் மீது கெட்டப்பெயர் அதிகரித்துள்ளது. விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பாதிப்பால் மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

அரசு ஊழியர்கள், சிறுபான்மை மக்களும் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளார்கள். அதனால், வரும் சட்டசபை தேர்தல் அதிமுகவுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கட்சியினர் கருதுகின்றனர். இந்நிலையில், சட்டசபை தேர்தலை சந்திக்க, பிரிந்து கிடக்கும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும், அதற்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று அவர்களும், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஒரு படி மேலே போய், அவரது எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

இவர்கள் மூவரையும் இணைக்க, அதிமுகவிலே ஒரு தரப்பினர் ஆதரவு திரைமறைவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா?' என்று குறிப்பிட்டு கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதிமுகவில் இனி எக்காரணம் கொண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தேனி மாவட்டத்தில் 2-ம் தேதி பொதுக் கூட்டத்தில் கே.பழனிசாமி பங்கேற்பதால், கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்கும் கே.பழனிசாமி கட்சித் தொண்டர்களுக்கு ஏதோ ஒரு செய்தியையும், தேர்தலில் எந்த வகையான கூட்டணியை அமைக்கப்போகிறோம் என்பதை அவர் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான உயர்மட்ட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x