Published : 28 Feb 2025 05:37 PM
Last Updated : 28 Feb 2025 05:37 PM
திருச்சி: “பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களிலும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் இன்று அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அப்போது திருமாவளவனிடம், “தமிழக ஆளுநர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், 'தமிழகத்தில் முன்மொழி தேவை. இளைஞர்களின் எதிர்காலத்தை தமிழகத்தில் தடுக்கின்றனர்' என்று குற்றம்சாட்டியுள்ளாரே” என்ற கேள்விக்கு, “ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்தவே நியமிக்கப்பட்டுள்ளவர் தமிழக ஆளுநர் ரவி.
இந்தியாவில் பழமொழிகள் பேசுகின்ற தேசிய இனங்கள் வாழ்கின்றோம். அதிலே ஒன்று இந்தி. தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்று சொல்லுவது அவர்களின் ஆதிக்கப் போக்கை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தி அல்லாத பிற மொழியை தாய்மொழியாக கொண்ட பிற மாநிலத்திலும் இந்தியைத் திணிக்க கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை நிலைப்பாடு. ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒரே தேசம், ஒரே மொழி என்கிற ஆர்எஸ்எஸ் அர்ஜெண்டாவை நடைமுறைப்படுத்துவதற்காக இப்படி தொடர்ந்து பேசி வருகிறார்.
தமிழ்நாட்டு மக்களை எதிர்காலத்தில் இந்தி பேசும் மக்களாக மாற்றுவது, ஒரே தேசம், ஒரே மொழியை உருவாக்குவது, இந்திக்குப் பிறகு சமஸ்கிருதமே் இந்தியாவின் ஒற்றை மொழி என மாற்றுவது என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள். ஆர்.என்.ரவி போன்றவர்களின் பேச்சுக்கு எல்லாம் இணங்க மாட்டார்கள்" என்று கூறினார்.
“2026-இல் 25 இடங்களில் போட்டியிடுவது தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது என்று வன்னி அரசு கூறியுள்ளாரே" என்ற கேள்விக்கு, “தேர்தல் நேரத்தில் இதுகுறித்து முடிவெடுப்போம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தேர்தல் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும், களமிறங்கி பணியாற்ற வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இயக்கத் தோழர்களை இயக்குவது, அணி திரட்டுவது என்னும் பொருளில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் அரசியலில் காய் நகர்த்த முடியாது என்ற நம்பிக்கையை ஊட்டுகிறோம்” என தெரிவித்தார்.
மேலும், "தொடர்ந்து திருமாவளவனை விலை கொடுத்து வாங்க முடியாது என்று வன்னி அரசு கூறியுள்ளார். யார் உங்களை விலை கொடுத்து வாங்க முயற்சித்தார்கள்?" என்று கேள்விக்கு, சிரித்தபடியே கைக்கூப்பி வணக்கம் செலுத்தபடியே, பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து கடந்து சென்றார். பேட்டியின்போது, திருச்சி கரூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் தமிழாதன், நிர்வாகி கிட்டு, மாவட்டச் செயலாளர் முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுத் தலைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் தலைமையில் இன்று (பிப்.28) நடைபெற்றது. தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு திருமாவளவன் கூறும்போது, “மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால் தமிழகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது உள்ள 39 மக்களவைத் தொகுதி 37 தொகுதியாக குறைய வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் தலைமையில் இது தொடர்பாக கூட்டம் நடைபெறுகிறது.
சீமான் நீதிமன்றத்தில் ஆஜராவது தொடர்பான விவகாரம் அவரது தனிப்பட்ட கருத்து. இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்களில் இந்தியை மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர். கற்கின்றனர். அங்கு ஆங்கிலம் கூட கற்றுக்கொடுப்பதில்லை. ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நடைமுறைபடுத்துவதுதான் தமிழக ஆளுநரின் பணி. மூன்று மொழிகளை கற்றால்தான் வேலை. அதுவும் இந்தியை கற்றால்தான் வேலை என தெரிவிப்பது தமிழக மக்களை ஏமாற்றுகின்ற வேலையாகும். இந்தக் கருத்துக்கு தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் இந்தியை திணிக்கக் கூடாது என்பதே எனது நிலைபாடு. வட இந்திய மாநிலங்களில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு பூர்விக குடிகளின் தாழ்மொழிகள் அழிக்கப்பட்டு, இந்தியை மட்டுமே பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது தாய் மொழியையே மறந்து விட்டனர். தாய்மொழி கற்பதையும் கைவிட்டு விட்டனர். ஒரே தேசம் ஒரே மொழி என்ற ஒரு ஆபத்தான பாசிச கொள்கை நிலப்பாட்டை, தமிழகம் மட்டுமன்றி இந்தி பேசாத பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
- விஜயகோபால் எம்.கே. மற்றும் பெ.பாரதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT