Published : 28 Feb 2025 05:27 PM
Last Updated : 28 Feb 2025 05:27 PM

வேட்புமனுவில் சொத்து விவரம் மறைத்த கவுன்சிலர்: திருவாரூர் ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுவில் தனது சொத்துகள் தொடர்பான முழு விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்காத திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவாரூரைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சா. பாப்பா சுப்ரமணியன் 2-வது வார்டுக்கான மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக வெற்றி பெற்றார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துகள் தொடர்பான முழு விவரங்களையும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். எனவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வேட்புமனுவில் தகவல்களை மறைத்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் பாப்பா சுப்ரமணியன் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்ய அனுமதித்தது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், “கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடைமுறைகள் முடிந்துவிட்டதால் இந்த புகார் குறித்து விசாரிக்க மாநில தேரதல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. பதவிக் காலம் முடிந்துவிட்டதால் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை தகுதி நீக்கம் செய்ய முடியாது” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில், “வேட்புமனுவில் முழு விவரங்களைத் தெரிவிக்காத பாப்பா சுப்ரமணியனுக்கு எதிராக தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்,” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வேட்புமனுவில் முழு விவரங்களையும் தெரிவிக்காதவரை தகுதி நீக்கம் செய்ய முடியாவிட்டால், எதற்காக அந்த தகவல்களை வேட்புமனுவில் கேட்கவேண்டும்? வேட்புமனுவில் முழுவிவரங்களை தெரிவிக்காத அவர் தனது பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய அனுமதித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “திருவாரூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாப்பா சுப்பிரமணியனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தற்போது பொறுப்பை தட்டிக்கழித்துள்ளனர். அவர் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x