Published : 28 Feb 2025 04:09 PM
Last Updated : 28 Feb 2025 04:09 PM
சென்னை: “கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். மாதம்தோறும் ரூ 8.5 கோடி வட்டி கட்டும் சென்னை மாநகராட்சி மொத்த கடனை அடைக்க மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்னென்ன? சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் ரூ 1,200 கோடி செலவில் பராமரிக்கும் பணி மற்றும் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, கடந்த 2022-ம் ஆண்டு 430 கோடி ரூபாய் செலவில் கழிப்பறைகள் பாராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது மேலும் 1,200 கோடி ரூபாய்க்கு கழிப்பறைகளை பராமரிக்கும் பணி அதே தனியார் வசமே ஒப்படைப்பது கடும் கண்டனத்துக்குரியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான காலை உணவுத்திட்டம், கால் பந்து திடல் என ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதும், கடும் எதிர்ப்பு கிளம்பிய பின் அதனை திரும்பப் பெறுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் சென்னை மாநகராட்சி, தன் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
சென்னை மாநகராட்சி வாங்கிய கடனுக்கு மாதம் தோறும் 8.5 கோடி ரூபாய் வட்டியாக செலுத்தி வரும் நிலையில், மொத்த கடனை அடைக்க எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன? தொழில் வரி, சொத்து வரி எனும் பெயரில் மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணம் அனைத்தும் எங்கே செல்கிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, கழிப்பறைகள் மற்றும் கடற்கரைகளை பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியின் மூலமாகவே அப்பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT