Published : 28 Feb 2025 01:04 PM
Last Updated : 28 Feb 2025 01:04 PM

''தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை'': ஓபிஎஸ் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை என விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தாய்ப் பாலுடன் கலந்து ஊட்டப்பெற்றது தாய்மொழி என்பதால், தாய்மொழியாம் தமிழ் மொழியில் படிக்க வேண்டுமென்றும், தாய்மொழியிற் சிறந்த தெய்வமுமில்லை என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர். மாணவ, மாணவியரின் சிந்தனையும், கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன என்பதால் தாய்மொழியாம் தமிழ்மொழி வழிக்கல்வி அவசியம் என்பதை அனைவரும் வலியுத்துகின்றனர்.

இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தாய்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம் என்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. நம் நாட்டின் தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்க்கப்பட வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசின் ஆணைகள், கோப்புகள், தகவல் தொடர்புகள் ஆகியவை தமிழில் இருக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை நிலவுகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், பெரும்பாலான அரசாணைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக, 2024 ஆம் ஆண்டு உள் துறை மூலம் வெளியிடப்பட்ட முக்கியமான அரசாணைகளில் 80 அரசாணைகள் ஆங்கில மொழியிலும், ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத் துறையை எடுத்துக் கொண்டால், ஒரே ஒரு அரசாணை தமிழ் மொழியிலும், 65 அரசாணைகள் ஆங்கில மொழியிலும் 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையைப் பொறுத்தமட்டில், 2024 ஆம் ஆண்டு 8 அரசாணைகள் தமிழ் மொழியிலும், 67 அரசாணைகள் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளிலும் இதே நிலைமை தான்.

இதேபோன்று அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் காப்பீடு தொடர்பான ஆணைகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன. அரசாணைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகின்றன என்றால், கோப்புகளும் ஆங்கிலத்தில் தான் இருக்கும். இதனை நிரூபிக்கும் விதமாக, நடத்துநர் மற்றும் ஒட்டுநர்களுக்கு அரசுப் பேருந்துகளில் விநியோகிக்கப்படும் பேருந்து குறிப்பேடு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதுநாள் வரை தமிழில் வழங்கப்பட்டிருந்த பேருந்து குறிப்பேடு தற்போது ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், இனிமேல் 100 சதவீதம் தமிழில் மட்டுமே பேருந்து குறிப்பேடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக சப்பைக்கட்டு கட்டியுள்ளது.

இதுதான் தமிழ் மொழியை வளர்க்கிற திமுக அரசின் லட்சணம். தமிழ் மொழியை காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் முதல்வரே தமிழ்மொழி காக்கும் முழக்கத்தை முன்னிறுத்துவோம் என்று கூறுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்தவும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியை வளர்க்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x