Published : 28 Feb 2025 11:28 AM
Last Updated : 28 Feb 2025 11:28 AM

''ஆதவ் அர்ஜுனாவின் அரசியலுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு இல்லை'' - மனைவி டெய்சி அறிக்கை

சென்னை: ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது மனைவியும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நானும் ஆதவ் அர்ஜுனாவும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருக்க விரும்புகிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

அனைத்து தொழில் முடிவுகளும், அரசியல் முடிவுகளும் சுயமாக எடுக்கப்படுகின்றன. எனவே, இதற்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எங்களுக்கு எதிராக பரப்பப்படும் அனைத்து தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் யூகங்களை தவிர்க்குமாறு கோருவதற்காகவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நாங்கள் இருவரும் தனித்துவமான வேலை வாழ்க்கையுடன், தனித்துவமான கருத்துக்களைக் கொண்டுள்ளோம். எங்களின் தனியுரிமையையும், கருத்துக்களையும் நாங்கள் ஒருவருக்கொருவர் மதிக்கிறோம்.

எனவே, தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் பரஸ்பர நலனுக்காக, தொழில் மற்றும் பொது வாழ்க்கையில் எங்களை சிக்க வைப்பதை தவிர்க்குமாறு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை மரியாதையுடன் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அதிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேடைதோறும் திமுக அரசை கடுமையாக ஆதவ் அர்ஜுனா சாடி வருகிறார். இந்தப் பின்னணியில், ஆதவ் அர்ஜுனாவின் மனைவியும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளுமான டெய்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x