Published : 27 Feb 2025 03:56 PM
Last Updated : 27 Feb 2025 03:56 PM

அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அண்ணாமலை கண்டனம்

சென்னை: திருவள்ளூரில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்துக்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதல்வர்?” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x